ரமலான் மாதம் உணர்த்தும் செய்தி என்ன?

 
– விளக்கம் தருகிறார் முகமது ஜியாவுதீன்

“இறைவனை வணங்குவதால் ஆதாயம் அடையவில்லை. ஆனால், சிலவற்றை இழந்திருக்கிறேன்.”என்கிறார் மௌலானா ரூமி.

13 ம் நூற்றாண்டில் ஈரானில் வாழ்ந்த ரூமி என்று இலக்கிய உலகம் கொண்டாடும் இமாம் ஜலாலுதீன், முகமது ரூமி அவர்களிடம் ஒருமுறை தவறாமல் இறைவனை வணங்குவதால் என்ன ஆதாயம் அடைந்தீர்கள். என்று கேட்கப்பட்ட போது எதையும் சம்பாதிக்கவில்லை. சிலவற்றை இழந்திருக்கிறேன் என்றாராம்.

இறைவனை தவறாமல் வணங்குவதால் பொதுவாக “நான் எதையும் சம்பாதிப்பதில்லை”, மாறாக “சில விஷயங்களை இழக்கிறேன்”.

நான் என்ற தற்பெருமையை இழந்தேன்.
நான் என்ற அகந்தையை இழந்தேன்.
கோபத்தை இழந்தேன்.
மன அழுத்தத்தை இழந்தேன்.
பேராசையை இழந்தேன்.
பொய் சொல்லும் இன்பத்தை இழந்தேன்.
பாவத்தின் சுவையை இழந்தேன்.
பொறுமையின்மையை இழந்தேன்.
நான் விரக்தியையும் மன அழுத்தத்தையும் இழந்தேன்.
என்றாராம்.

பல நேரங்களில் நாம் தொழுகிறோம், ஜெபிக்கிறோம் அல்லது வணங்குகிறோம்,
அது எதையாவது பெறுவதற்காக மட்டும் இருக்காமல், தனிப்பட்ட முறையில் மற்றும் ஆன்மீக ரீதியில் நம்மை வளர அனுமதிக்காத பல விஷயங்களை இழப்பதற்காகவும் இருக்க வேண்டும்.

இறைவனிடம் நமது பிரார்த்தனை, நம்மைப் பயிற்றுவிக்கவும், பலப்படுத்தவும், குணப்படுத்தவும் வேண்டும். குறிப்பாக இந்த புனிதமான ரமலான் மாதம் நாம் உணர்கிற பசி என்ற அனுபவம், பசித்திருக்கும் மனிதருக்கெல்லாம் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வைத் தர வேண்டும். ஒருவருக்காவது உதவாத நாள் நமது வாழ்க்கையில் வீணானது என்று அறிய வேண்டும்.

கொடுப்பதற்கு பணம், காசு மட்டுமல்ல நம்மை சந்திக்கும், நமக்கும் கீழானவர்களிடம் கடுமையான வார்த்தைகள் தவிர்த்து புன்னகை புரிவதில் தொடங்கி அன்பாக பிறரை நடத்தும் ஒவ்வொரு செயலும் இறைவணக்கம் என்று உணர வேண்டும்.

ஆம், ஏழைகளுக்கு உதவுவதே இறைவனைச் சேரும். சக மனிதர்களை நேசிக்காதவர் எவ்வளவு பெரியவர் என்றாலும் இறைவனின் நேசம் பெற முடியாது.

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் கொண்டாடும் ரமலான் உள்ளிட்ட எல்லா பண்டிகைகளும் மதங்களைக் கடந்த மானுட நேயத்தை வளர்க்க வேண்டும்.

தான் என்ற அகந்தை அழிவதும்;
தர்ம சிந்தனை வளர்வதும்;
மனிதருள் அனைவரும் சமம் என்று உணர்வதும்
கடவுள் நம்மை தேடிவரும் தருணங்களாகும்.

 

– அ. முகமது ஜியாவுதீன் 

மாவட்ட நீதிபதி (ஓய்வு)