உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்டு மருத்துவம் படிக்க வையுங்கள்

– செக்யூரிட்டி தந்தை முதல்வருக்கு வேண்டுகோள்

உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற தனது மகளை பத்திரமாக மீட்டு வந்து கோவையில் மருத்துவ படிப்பை படிக்க வைக்க தமிழக முதலமைச்சர் உதவ வேண்டும் என்று கோவையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் மாணவியின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிலவும் சூழலில் அங்கு படிக்கவும், அலுவல் ரீதியாக சென்றவர்களும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனில் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கோவை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக மாணவிகள் உக்ரைன் சென்றுள்ளனர். அதன்படி, கோவையில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகிறார் கோவையை சேர்ந்த மாணவி அழகு லட்சுமி.

அழகு லட்சுமியின் தந்தை கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே தன்னார்வலர்களின் உதவி கிடைத்ததால் அழகு லட்சுமிக்கு உக்ரைனில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது உக்ரைனில் 3ம் ஆண்டு படித்து மாணவி, போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை சிவக்குமாரிடம் கேட்கச் சென்றோம். நிற்கவே நேரமில்லாது, உணவக வாசலில் மும்முரமாக தனது பணியை கவனித்து வந்தார்.

தனது இடைவிடாத பணிக்கு மத்தியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடும் சிரமத்திற்கு இடையில் எனது மகள் படிக்க சென்றுள்ளார். அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்குள் கோவை வந்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இப்போது போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் எனது மகள் மீண்டும் அங்கு சென்று படிக்க முடியாது. எப்படியாவது எனது மகளை மீட்டு வந்து கோவையிலேயே அவர் மருத்துவம் படிக்க அரசு உதவி செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் எனது மக்களுக்கு உதவ வேண்டும்.” என்றார்.