செஸ் சாம்பியன் பிரக்யானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா வீழ்த்தியுள்ளார். இதற்காக பிரதமர் மோடி பிரக்யானந்தாவை பாராட்டியுள்ளார்.

ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா, 2 போட்டிகளை டிரா செய்தார். மற்ற போட்டிகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். ஆட்டத்தின் 39 வது நகர்வில், மேக்னஸ் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரை, சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவர் தோற்கடித்திருப்பது சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பாக மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் தோற்கடித்துள்ளனர். ஆனாலும் இத்தனை சிறிய வயதில் கார்ல்சன் போன்ற அனுபவஸ்தரை வீழ்த்துவது சாதாரண சாதனையல்ல.

பிரக்யானந்தாவுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “இளம் மேதை ஆர் பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். புகழ்பெற்ற சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவர் வெற்றி பெற்றது குறித்து பெருமையடைகிறோம். திறமையான பிரக்ஞானந்தாவின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்.” எனக் கூறியுள்ளார்.