அதிமுக வேட்பாளர்களை தேர்தல் பொறுப்பாளர்கள் அலைக்கழிப்பதாக கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் புகார்

கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்ஜுனன், அருண்குமார், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவில் கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு, அதிமுக வேட்பாளர்களை பல்வேறு காரணங்களை கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வருவதாகவும், காவல்துறையினர் அதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தேர்தல் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊரக உள்ளாட்சிகளில் எந்தப் பதவியையும் வகிக்க வில்லை என்ற உறுதிமொழி ஆவணம் Affidavit வடிவில் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணைய விதிமுறைகளில் குறிப்பிடவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வங்கியில் புதிதாக வங்கிக்கணக்கு துவக்கப்பட்ட ஆவணம் வேட்புமனுவுடன் இணைந்து தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணைய விதிமுறைகளும், வேட்பாளர் வழிகாட்டி கையேட்டிலும் குறிப்பிடவில்லை. வேட்பு மனு படிவத்தில் வேட்பாளர்களின் இன்சியல் பெயருக்கு முன்பாக போடக்கூடாது பின்னால் தான் போட வேண்டும் என பல இடங்களில் தேர்தல் பொறுப்பாளர்களால் கட்டாயப் படுத்தப்படுகிறது. இது தேர்தல் விதிமுறைகளில் குறிப்பிடப்படாத ஒன்று. வேட்பாளர் வழிகாட்டி கையேடு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை தவிர வேறு எந்த ஆவண சான்றிதழ்களையும் இணைக்க வேட்பாளர்களை வற்புறுத்தக்கூடாது. ஆகிய கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து அவர்களது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் தேவையற்ற காரணங்களைக் கூறி அதிமுக வேட்பாளர்களை வேண்டும் என்றே அலைக்கழித்து வருவதாக குற்றம் சாட்டினார். காவல்துறையினர் திமுக கட்சியாகவே மாறி உள்ளனர் என்றும் விமர்சித்தார்.

மேலும் அதிமுக வேட்பாளர்களை நிராகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர் தேர்தல் அதிகாரிகளும் காவல் துறையினரும் இத்தகைய போக்கை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கோவை மாவட்டத்தில் தேர்தலைப் பொருத்தவரை உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் எனவும் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அதிகாரிகள் வேலை செய்வதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், தேர்தலின் பொழுது என்னையும் சக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் காவல்துறையினர் அழைத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர் யாரை மிரட்டியும் யாரும் வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.