கனவு பலிக்குமா?

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப்பின் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவர் ராமதாஸ் செய்து வரும் அரசியல் நகர்வுகளுக்கு பலன் கிடைக்குமா? இல்லையா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கொண்டிருந்த ராமதாஸ், ஜெயலலிதா மறைவுக்குப்பின் 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவுடன் பயணித்தார். இந்த இரண்டிலுமே அதிமுகவால் பாமகவுக்கு பயனில்லை என்பதையும், பாமகவால் அதிமுகவுக்கு பயன் கிடைக்கிறது என்பதையும் புரிந்துகொண்ட ராமதாஸ், நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 43 ஒன்றியக்குழு உறுப்பினர்களைப் பெற்று தனது சக்தியை ஓரளவு நிரூபித்தார்.

இப்போது எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டி என அறிவித்து தொடர்ந்து பாமக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டங்களில் ராமதாஸ் சில அரசியல் நகர்வுகளை நுட்பமாக செய்து வருகிறார். தமிழகத்தில் பெரும்பான்மை சமூகம் வன்னியர்கள் சமூகம்தான், பெரும்பான்மை சமூகம் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று கேரள மாநிலத்தை உதாரணமாகக் காட்டி தொடர்ந்து பேசி வருகிறார். மேலும், வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள 60 தொகுதிகளில் வெற்றிபெற்றால் அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கர்நாடகத்தில் குமாரசாமிக்கு கிடைத்தது போல அன்புமணிக்கும் கிடைக்கும் என்றும் வன்னியர்களிடம் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசி வருகிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணி தருமத்துக்கு எதிராக செயல்பட்டதால் பாமக தோல்வி அடைந்துவிட்டதாக மிகப்பெரிய குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசியுள்ளார்.

மேலும், அவர் பேசும்போது, கூட்டணி பேசும்போது 5 தொகுதிகளில் தொடங்கி இறுதியாக 23 தொகுதிகளை கெஞ்சிக் கூத்தாடி பெற்றதாகவும், பாமக வாங்கும் மனு, கொடுக்கும் இடத்தில் இருப்பதைவிட, மனு வாங்கும் இடத்தில் இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்றும் தொண்டர்களிடம் உணர்வுப்பூர்வமாக பேசினார்.

இதுவரை அமைதி காத்துவந்த எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த மாவட்டத்தில் இருந்துகொண்டே தனக்கு ஆதரவாக இருக்கும் (வன்னியர்கள்) எதிராக திருப்பும் முயற்சியில் ராமதாஸ் ஈடுபடுகிறார் என்பதை அறிந்துகொண்டு அவரும் பாமக மீது நேரடி விமர்சனம் செய்துள்ளார். அவர் அளித்த பதிலடியில், கூட்டணியில் இருந்து தாமாகவே பாமக விலவிட்டது, கூட்டணி மாறுவது தான் அவர்களுக்கு வாடிக்கை என்றும் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய ராமதாஸ், திமுகவைப் பெரிய அளவில் விமர்சனம் செய்யாமல் தொடர்ந்து அதிமுகவை விமர்சனம் செய்து வருவதற்கு பின்னால் பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக கூட்டணியில் 2021 பேரவைத் தேர்தலில் 23 தொகுதிகளை மட்டுமே பாமகவுக்கு கொடுத்து, பாமக வாக்கு வங்கியை 4 சதவீதத்துக்கு கீழ் எடப்பாடி பழனிசாமி சரித்துவிட்டதாகவும், தங்களது ரத்த உறவு சமூகமாகவும், பிரதான வாக்கு வங்கியாகவும் இருக்கும் வன்னியர் வாக்கு வங்கியில் கணிசமான அளவை எடப்பாடி பழனிசாமி தலைமைக்குப் பின் தந்திரமாக ஒன்றுதிரட்டி விட்டதாக ராமதாஸ் உணர்கிறார்.

அதேபோல, போட்டியிட்ட 23 தொகுதிகளில் குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக, அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போயிருந்தால் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக பாமக மாறும் என ராமதாஸ் கணக்குப் போட்டிருந்தார். ஆனால், பாமகவால் சேலம், தருமபுரியில் 4 தொகுதிகளையும், ஒட்டுமொத்த வடதமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

இதற்கு முக்கிய காரணம், அதிமுகவின் இதர சமூக வாக்குகள் பாமகவுக்கு பரிமாற்றம் ஆகவில்லை. இதன் காரணமாகவே வாக்கு எண்ணிக்கையின்போது பாமக, 10 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும், இதர சமூக வாக்குகள் எதிராக போனதால் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. 5 தொகுதிகளிலும் பென்னாகரம், தருமபுரி, சேலம் மேற்கு, மேட்டூர் ஆகிய 4 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியின் சொந்த சமூகமான கொங்கு வேளாளர் சமூக வாக்குகள் பாமகவுக்கு பரிமாற்றம் ஆனதால் மட்டுமே பாமக வெற்றிபெற்றது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த 4 தொகுதிகளில் பாமக தோல்வி அடைந்திருக்கும்.

இப்போது ராமதாஸ் போடும் கணக்கு, சட்டப்பேரவைத் தொகுதிகளிலேயே 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவை அரசியல் ரீதியாக மட்டுப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வாய்ப்பு இல்லை. அதிகபட்சம் 4 மக்களவைத் தொகுதிகள் வரை தான் அதிலும், பாமக பலகீனமான மத்திய சென்னை, திண்டுக்கல் போன்ற தொகுதிகளை மட்டுமே பாமக தலையில் கட்ட வாய்ப்பு அதிகம்.

பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடியே களம் இறங்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவைவிட, பாஜகவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே ராமதாஸ் தெரிந்து கொண்டார். எனவே, 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியிலும் வாய்ப்பு இல்லாத நிலையில் தனித்து களம் இறங்கி பாமகவின் வாக்கு வங்கியை நிரூபிப்பது தான் தனது மகன் அன்புமணியின் எதிர்காலத்துக்கு உகந்தது என்றும் ராமதாஸ் கணக்குப் போடுகிறார்.

2011 மக்களவைத் தொகுதியில் திமுக அணியில் தோல்வி அடைந்தபிறகு மனதைரியத்துடன் அதில் இருந்து விலகி தனித்து களம் இறங்கிய ராமதாஸ், இப்போதும் அதிமுகவில் இருந்து விலகி 2024 இல் தனித்து களம் இறங்கும் முடிவை எடுத்துள்ளார். அதேபோல, 2014 மக்களவைத் தேர்தலில் பாமக எதிர்ப்பு வாக்குகள் சிதறியதால் மட்டும் தான் தருமபுரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற முடிந்தது. அதுவே 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் போட்டியிட்டபோது இரு முனை போட்டியில் பாமகவுக்கு எதிரான அதிமுக ஆதரவு வாக்குகள் கூட திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு விழுந்துவிட்டது. இதன் விளைவு, கடும் போட்டியில் அன்பு மணி ராமதாஸ் தோல்வி அடைந்தார். இப்போதும் 2024 மக்களவைத் தேர்தலில் மும்முனை போட்டி உருவானால், பாமகவின் சொந்த பலத்தில் அன்புமணி ராமதாஸ் வெற்றிபெறலாம் என ராமதாஸ் கணக்குப் போட்டிருக்கக்கூடும்.

அதேபோல 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாமகவின் வாக்கு வங்கியை 3.8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு மேல் கொண்டுச் சென்றால் மட்டுமே 2026 பேரவைத் தேர்தலில் தனித்தோ அல்லது ஏதாவது ஒரு கூட்டணியிலோ பாமகவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது ராமதாஸின் மனக்கணக்கு. அதேபோல 2024 மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் பயணித்தால் வன்னியர் சமூக பெரும்பான்மை வாக்குகள், எடப்பாடி பழனிசாமியின் சொந்த வாக்குகளாக மாறிவிடும் வாய்ப்பும் உருவாகும் என்ற பயமும் ராமதாசுக்கு இருக்கக்கூடும். பாமக மற்றும் அன்புமணி ராமதாஸின் அரசியல் எதிர்காலம் கருதி வன்னியர்களிடம் வீரமாகவும், கெஞ்சும் வகையிலும் தொடர்ந்து ராமதாஸ் பேசி வருகிறார்.

அதனால் தான் அச்சு, காட்சி ஊடகங்களை தொண்டர்கள் நம்ப வேண்டாம், திண்ணைப் பிரசாரம், சமூக ஊடக பிரசாரம் ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுங்கள், பாமகவின் வெற்றிக்கு அதுவே கைகொடுக்கும் என்றும் தொடர்ந்து பேசி வருகிறார். ராமதாஸின் அரசியல் கணக்குகள் பலிக்குமா அல்லது கானல் நீராகுமா என்பது எதிர்வரும் மக்களவைத் தேர்தல், சட்டபேரவைத் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

 எடப்பாடி பழனிசாமியின் கணக்கு

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்ட டாக்டர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியின் மன ஓட்டத்தை நன்கு அறிந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை ஜெயலலிதாவைப் போல் மக்களவைத் தேர்தலுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். காரணம் 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒருவேளை மூப்பனாரின் தமாக உடன் அதிமுக கூட்டணி வைத்து இருந்தால் கண்டிப்பாக தமாக, அதிமுக, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களை வென்று இருக்கக்கூடும்.

ஆனால் ஜெயலலிதாவோ அப்போது கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாமல் 2001 ஆம் ஆண்டு சேர்த்துக்கொண்டார். காரணம் 1999 ஆம் ஆண்டு சேர்த்துக் கொண்டிருந்தால் மூப்பனாரின் வாக்கு வலிமை நிலைத்திருக்கும். அது மூப்பனார் 2001ஆம் ஆண்டு தனித்து களம் காண்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும்.

அதேபோல 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு சோ அவர்கள் அதிமுக, தேமுதிக, பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் எனக் கூறினார்.

ஆனால் ஜெயலலிதாவோ தேமுதிகவை 2009ஆம் ஆண்டு சேர்த்துக்கொண்டால் 2011 ஆம் ஆண்டு விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக தனித்துக் களம்காணக் கூடும் என்பதை நன்கு அறிந்து கொண்டார். இதன் காரணமாகவே 2009 ஆம் ஆண்டு பாமக, அதிமுக, மதிமுக உடன் கூட்டணி வைத்துக் கொண்ட ஜெயலலிதா, 2011 ஆம் ஆண்டு தேமுதிகவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இந்த நகர்வுகளை நன்கறிந்த எடப்பாடி பழனிசாமி 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி சேர்ந்து அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றால் அவர் 2026 ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

அதனால் 2024 ஆம் ஆண்டு பாமக உடன் கூட்டணி அமைக்கும் விருப்பம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.