தொழில்துறை: 1 நாள் வேலை நிறுத்தத்திற்கு தயராகும் கோவை!

கோவையைச் சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்ட சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக, மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு வரும் டிசம்பர் 20 ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம், தென்னிந்திய பொறியியல் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம், இந்திய தொழில் வர்த்தக சபை போன்ற அனைத்து தொழில் சங்கங்களும் இதில் பங்கேற்கும் என தகவல்கள் கூறுகின்றன.

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைப்புகளின் அகில இந்திய அளவிலான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில்: சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையானது உள்நாட்டு உற்பத்தியில் 30%, ஏற்றுமதி உற்பத்தி 48% பங்களிப்பு அளிப்பதோடு, 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாகவும், 40 கோடி பேர் சார்ந்திருக்கும் துறையாகவும் உள்ளது என்றும் அடிகோடிட்டு காட்டப்பட்டது.

மூலப்பொருள்களில்  இரும்பு தொடங்கி, தேனிரும்பு, அலுமினியம், தாமிரம், பேக்கிங் காகிதம், பிளாஸ்டிக் என அனைத்து மூலப்பொருட்களும் பல மடங்கு விலை ஏற்றம் கண்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு, தொழிலைத் தொடர இயலாமல் இருப்பதோடு, பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயமும் தோன்றி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவில் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு உடனடியாக தலையிட்டு, தீர்வுகாண வலியுறுத்தி தொழிற்சாலைகளில் டிசம்பர் 20 ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அமைதியான முறையில் கூடி பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலப் பொருட்களின் விலையேற்றம் குறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறுகையில்: சீன நாடு அவர்களின் மூலப் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதை நிறுத்தி விட்டது. தற்போது சர்வதேச சந்தையில் இருந்து அதிகளவிலான பொருட்களை வாங்குகிறது சீனா.

இதனால் சர்வதேச சந்தையில் மூலப்பொருட்களின் தேவை அதிகரித்து விட்டது. தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் உயர்வடைகிறது.

மேலும் அந்த சந்தைகளில் பொருட்களின் தேவை அதிகமிருப்பதால் இந்தியாவில் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களும் அங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோன்று அதிகளவில் ஏற்றுமதி செய்யும்போது இங்குள்ள தொழில் நிறுவனங்கள் பாதிப்படைகின்றன.

இந்தியாவில் வாங்கும் இரும்பின் விலையை விட தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதன் விலை குறைவு தான். அனால் இவற்றை அங்கிருந்து இறக்குமதி செய்யும்போது இறக்குமதி வரி அதிகமாக உள்ளது. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மூலப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை ஆனால் இறக்குமதிக்கு வரி வசூலிக்கப்படுகிறது.

இதை பூஜ்ய இறக்குமதி வரியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் தொழில் நிறுவனங்களில் வேலை நேரம் குறைவதோடு, வேலையிழப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றார்.

மூலப் பொருட்களின் விலையேற்றத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருளின் விலையும் அதிகரிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கண்ட விலையேற்றத்தினை இதுவரை கண்டதில்லை என தொழில் அமைப்புகள் தெரிவிக்கின்றன.