டெங்கு காய்ச்சல் பரவல்: அரசு மருத்துவமனையில் கூடுதல் பிரிவுகள்

டெங்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில், அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பெரியவர்களுக்கு கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் வைக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் சூழலில், டெங்கு பரவல் அதிகதிரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

அந்த வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதல் அவசர சிகிச்சைப் பிரிவுகளை ஏற்படுத்தி அவற்றை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையைப் பொறுத்தவரை அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தைகளுக்கு 15 படுக்கைகள், பெரியவர்களுக்கு 25 படுக்கைகள் என மொத்தம் 40 படுக்கைகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், “அனைத்து விதமான இடர்பாடுகளையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு விரைவில் தொடங்கப்படும்.” என்றார்.