நாடு கெடுக்கும் ‘குடி’

குடிப்பதனால் ஒருவரது உடல், மன நலம் மட்டுமல்ல, அவரது குடும்பமும் சீர்குலைந்துபோகும். அச்சம், தன்னம்பிக்கை இல்லாமை, பகுத்தறியும் திறன் இல்லாமை, எதிர்காலம் குறித்து சிந்திக்காமை, ஒருநிலைத்தன்மை இல்லாமை, ஆக்ரோஷம், தவறான பாதை என பல்வேறு உளவியல் பிரச்னைகளுக்கு குடிப்பவர்களின் பிள்ளைகள் ஆளாவதற்கு காரணம், தந்தையின் குடி. இதுமட்டுமல்ல, ‘குடி’மகனின் வீட்டுப் பொருளாதாரமும் பாதிக்கப்படும். ஆதலால்தான், குடி குடியைக் கெடுக்கும் என்கின்றனர்.

ஆனால் இவ்வாசகத்தை சொல்லிக்கொண்டே, டாஸ்மாக் நடத்தப்படுகிறது. ஒரு தலைமுறையின் சிந்திக்கும் ஆற்றலை, போராடும் குணத்தை, கேள்வி கேட்கும் தன்மையை, ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அவர்களைக் கையேந்த வைப்பதுதான் மதுக்கடைகளின் நோக்கம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை, காவிரி விவகாரம், ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம் என தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. ஆனால், நேரிடையாக தங்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்குக் கூட, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்து போராட மக்கள் தயாராக இல்லை. தினசரி வேலை, பணம் சம்பாதிப்பது, குடிப்பது, டிவி பார்ப்பது என்று மக்கள் சுயநலமாக வீட்டிற்குள் அடங்கிவிட்டனர் அல்லது அடைக்கப்பட்டுள்ளனர்.

பகல் 12 மணிக்குத்தான் கடை திறக்கும் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், காலை 6 மணி முதல் மற்றும் அரசு விடுமுறை தினங்களில்கூட மதுக்கடைகளில் மது விற்பனை கள்ளத்தனமாகத் தொடர்கிறது. அரசாங்கக் கொள்கை யில் நீதிமன்றமே தலையிட முடியாத போது, மக்களால் என்ன செய்துவிட முடியும்?! மக்கள்தான் தங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுதான் இன்றைய தமிழக நிலை.

போதை, தமிழக மக்களை, குறிப்பாக மாணவ சமூகத்தை ஆட்டிப்படைக்கிறது. போதைக்கு அடிமையான மாணவர்கள், மதுவைத்தாண்டி, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களைத் தேடிச் செல்லத் துவங்கிவிட்டனர். மாணவிகள், பெண்களில் ஒருசிலர் விடுதியில், வீட்டில் தனியாகக் குடித்துக்கொண்டிருந்தனர். தற்போது தைரியமாக வெட்டவெளிக்குவரத் துவங்கிவிட்டனர். ஆம். அண்மையில் கோவையில் உள்ள டாஸ்மாக்கில் இரு மாணவர்களோடு அமர்ந்து குடியும், புகையுமாக மாணவி ஒருவர் அமர்ந்திருக்கும் விடியோ சமூக ஊடகத்தில் பரவியது. இது ஒரு சிறு உதாரணம்தான். பெண் குடிப்பது தவறா? அதுவும் டாஸ்மாக் மதுபானக்கடையில் பட்டப்பகலில் குடிமகன்கள் பலர் முன்னிலையில் அவர்களுக்கு சரிசமமாக அமர்ந்து குடிப்பது தவறா? ‘கிளப்’, ஹோட்டல் மது விருந்துகளில், வீட்டிற்குள், தனியறையில் செய்யும் காரியங்கள் மற்றவர்களின் கேள்விக்கும் பார்வைக்கும் வருவதில்லை.

ஆண்கள் குடிப்பதே தவறு. இதில் பெண்களும் இணைந்துகொண்டால் பிறகு வருங்கால சந்ததி என்னவாகும்? வருங்கால சந்ததியைவிட்டுத் தள்ளுங்கள். போதைக்கு ஆட்படும் பெண்களின் உடல், மன நிலை என்னவாகும்? ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா என்று ஆண் வெளிப்படையாக செய்யும் தவறுகளை, பெண்ணும் செய்வேன் என்றால், பிறகு சமுதாயத்தில் தவறுகள்தான் நிறைந்திருக்கும்.

உடலில் அதிமுக்கிய பாகமான வயிறு, பசி எனும் உணர்வினால் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்று என்பதாகாது. ஆண் குடித்தால் கல்ல¦ரல் கெட்டுப்போய், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். அவன் குடும்பம் சீரழியும். பெண் என்பவளுக்கு வயிறு என்பது, வெறும் கல்லிரல், மண்ணீரல், சிறுநீரகம், கணையம் என்பதோடு மட்டுமல்லாமல், கர்ப்பப்பை எனும் பிரம்மஸ்தானமும் உள்ள பாகமாகும். இது கெட்டுப்போனால், ஒரு சந்ததியே சந்தடியற்றுப்போகும்.

தற்போது சீர்கெட்ட உணவுப்பழக்க வழக்கங்களால் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதே பெண்களுக்கு சிரமம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு உதாரணமாக நகரில் பெருகிவரும் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவமனைகளின் எண்ணிக்கையைக் கூறலாம். இப்படியிருக்க, ‘எரியும் தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல்’ மது அருந்துவது மாபெரும் தவறு. பெண் என்பவள் தாய் அம்சம் ஆவாள். மானிட வர்க்கத்தில் மட்டுமல்லாது, உலகின் உயிர்ச்சூழலில் பெண்ணே முதன்மையானவள். ஆண், பெண்ணிற்கு அடுத்த அம்சமே. பெண் இல்லையெனில், உலக இயக்கம் இல்லை.

இப்படி பேசுவது, பெண்ணை முடக்கும் செயல், பிதற்றல், பிற்போக்கு சிந்தனை, ஆணாதிக்க வெளிப்பாடு, நாட்டில் நடக்காதா, அந்தப் பெண்ணை விடியோ எடுத்ததுதான் தவறு, ஆணைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும், ஆண்தான் முதலில் திருந்த வேண்டும் என்று, போலி பெண் சமத்துவம் பேசும் ‘முற்போக்கு சிந்தனை நண்பர்களை’ பெண்கள் தங்களிடம் இருந்து விலக்கி வைப்பது நல்லது. இவ்வாறு பேசுபவர்கள், தங்கள் தாய், மனைவி, சகோதரி உள்ளிட்ட தன்னைச் சார்ந்தோர் மது அருந்துவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன், அப்படியொரு பெண்ணை மனைவியாகவும் ஏற்க மாட்டார்கள். ஆனால் பெண் தோழியாக வைத்துக்கொள்வார்கள். அவர்கள் பொதுவெளியில் பிற வீட்டுப் பெண்களுக்கு எனத் ‘தனியாக ஒரு நியாயம்’ பேசுவார்கள்.

பெண், தனது வீரத்தை வெளிக்காட்ட எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. இதோ, ஒரு பாத்திமா பாபு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முன்னின்று மக்களுக்காகப் போராடுகிறார். இதுதான் பெண் சுதந்திரம், சமத்துவம், வீரம். கல்லூரி மாணவிகள் தங்கள் கல்வியைத் தாண்டி சாதிக்க, சந்திக்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றன. இப்படி வெட்டவெளியில் குடித்துத்தான் சுதந்திரம் பேணும் சூழ்நிலையில் இன்றைய தமிழக நிலை இல்லை.

சினிமா, அரசியல், மருத்துவம், சட்டம், சமூக வாழ்வியல் குறித்த புரிதல் எதுவும் இல்லாமல், வெறும் மனனம் மட்டுமே உள்ள நமது கல்விமுறையும் இந்நிலைக்கு ஒரு காரணம். கல்வி, வேலை, பணம் என்பதைத் தாண்டி பெரும்பாலான மாணவர்கள் சிந்திப்பது இல்லை. அப்படியே சிந்தித்தாலும் பெற்றோர் ‘உனக்கெதுக்கு’ என்று அவர்களை வீட்டிற்குள் அடக்கிவைக்கின்றனர். ஒரேயொரு ‘ஜல்லிக்கட்டு’ போராட்டம்தான். அதற்கடுத்து வேறெதுவும் இல்லை. சினிமா, அரசியல் குறித்த தெளிவின்றி, ‘சூப்பர் ஹீரோ’க்களின் பின்னால் தற்போதைய இளைஞர்கள் சுற்றுகின்றனர்.

இந்நிலை மாற வேண்டுமெனில், பெற்றோர் மாற வேண்டும். ‘எனது பிள்ளைகளுக்காக வேலைக்குச் செல்கிறேன், பணம் சேர்க்கிறேன்’ என மாடாய் உழைப்பதை விட்டுவிட்டு, உங்கள் பிள்ளைகளோடு மனிதனாய், நண்பர்களாகப் பழகி, அவர்களது தேவை, விருப்பம் அறிந்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். மதிப்பெண்களைவிட மதிப்புடையவை நீர், நிலம். இவை இப்போது வேகமாக விலைபோய்க் கொண்டு இருக்கிறது. எனவே, நாடு கெடுக்கும் ‘குடி’யை முதலில் அனைவரும் விலக்க வேண்டும். அத்துடன், தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து வழிகாட்ட வேண்டியது இன்றைய பெற்றோரின் கடமை. அப்போதுதான் உண்மையான உணர்வுகள், உறவுகள் வளரும்.

கா.அருள்

தி கோவை மெயில்