அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், அதனை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர்.

‘காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை. இதனால், மத்திய பா.ஜ., அரசு மீது முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதேநேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாதம் அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்தும், வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க., சார்பில் கோவையில், காந்திபுரம் பகுதியில் இன்று(3.4.2018)  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.