நாங்கள் எதிரி கட்சி அல்ல, எதிர் கட்சி தான் – அண்ணாமலை

கோவையில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளரகள் சந்திப்பு சனிக்கிழமை (14.08.2021) நடைபெற்றது. இதில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

கோவையில் ஆசிர்வாத் யாத்திரை 16ம் தேதி துவங்க உள்ளதாகவும், தொடர்ந்து மூன்று நாட்கள் கோவை, திருப்பூர் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இந்த யாத்திரையின் மூலம் மத்திய அரசு வழங்கிய நலத்திட்டங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படும். 43 மத்திய அமைச்சர்களும் 22 மாநிலங்களில் நடைபெறும் இந்த யாத்திரைகளில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்திற்கு 7 லட்சம் கோடி ரூபாய் ட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. முத்ரா திட்டத்தால் நாட்டிலேயே திருப்பூர் மாவட்ட மக்கள் அதிக பயன்பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

திமுக அரசு 100 நாட்கள் ஆட்சியை நிறைவு செய்கிறார்கள். அதிகாரிகள் நன்றாக பணியாற்றுகிறார்கள். கொரோனா இரண்டாவது அலையை மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கட்டுப்படுத்தியுள்ளனர். கடந்த மாதம் மட்டும் 19 லட்சம் தடுப்பூசி தமிழகத்திற்கு அதிகமாக வந்துள்ளது. இதனை திமுக அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். ராணுவ தளவாட மையம் மூலம் 2 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இப்படி இணக்கமாக இருந்தால் முழு பயனும் கிடைக்கும். நாங்கள் எதிரி கட்சி அல்ல. எதிர் கட்சி தான் என்றார்.

பெட்ரோல் விலை குறைப்பால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி-க்கு கீழ் கொண்டுவர கவுன்சில் ஒத்துழைப்பு வேண்டும். மாநிலத்தின் நிதி அமைச்சர் ஒத்துழைப்பாரா? என கேள்வி எழுப்பினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், ஆகம விதிப்படி நடைபெற வேண்டும் எனக் கூறினார்.