படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் மரணம்

விருவிருப்பான சண்டைக் காட்சியை படமாக்கும்போது ஸ்டண்ட் கலைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டண்ட்மேன்கள் ஆக்‌ஷன் திரைப்படங்களில் முக்கியமானவர்கள். பார்வையாளர்களிடமிருந்து ஹீரோக்கள் கைதட்டல்களைப் பெற தங்கள் உயிரைப் பணயம் வைத்து, ஆபத்தான சாகசங்களை செய்கிறார்கள். இந்நிலையில் கர்நாடகாவின் பெத்தாடியில் கன்னட திரைப்படமான ‘ஐ லவ் யூ ரச்சு’ படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 28 வயது ஸ்டண்ட் நடிகர் விவேக் பரிதாபமாக இறந்தார்.

வினோத் என்பவர் சண்டைக் காட்சியை அமைக்க, படப்பிடிப்பின் போது, மின்சாரம் பாய்ந்து விவேக் சம்பவ இடத்தில் இறந்தார். அதோடு மற்றொரு ஸ்டன்ட்மேன் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். படத்தின் இயக்குனர் ஷங்கர் எஸ் ராஜ், தயாரிப்பாளர் குரு தேஷ்பாண்டே மற்றும் ஸ்டண்ட் இயக்குனர் வினோத் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தப்படத்தில் அஜய் ராவ் என்பவர் கதாநாயகனாகவும், ரசித்தா ராம் என்பவர் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இதே போல் ஒரு விபத்து ‘இந்தியன் 2 ‘ படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்தது. அதை தொடர்ந்து கன்னட திரையுலகின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.