குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது  குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று தொடங்கியது.

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே தற்போது மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகளும் 18- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை.

முதல்முறையாக 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட கிளிக்கல் பரிசோதனைகளை நடத்திக்கொள்ள மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளது.

இந்த பரிசோதனைகள் டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூர் எம்ஐஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட 525 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. 525 தன்னார்வலர்களுக்கு இந்த சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி சோதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 12 முதல் 18 வயதுடைய பிரிவினருக்கு தடுப்பூசி ஆய்வுகள் தொடங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் இந்த சோதனை இன்று தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாட்னா உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்கெனவே 12 – 18 வயதுடைய குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டது.

இன்று முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 – 6 மற்றும் 6 – 12 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.