தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு இவ்வளவுதான் கட்டணமா!

கோவை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் 5 ஆயிரத்து 127 படுக்கைகள் தயாராக உள்ளது என்றும், தனியார் மருத்துவமனைகளில் கூட கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தமாக 5 ஆயிரத்து 127 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 80 ஆயிரத்து 903 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 507 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 12 ஆயிரத்து 395 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொடிசியா அரங்கம் மற்றும் மாநகராட்சி மருத்துவ மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிகளை இலவசமாக போட்டு கொள்ளலாம்.

தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கொரோனா சிறப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காருண்யா சிறப்பு மையம், கொடிசியா அரங்கம், உள்ளிட்ட பல்வேறு மையங்களில் சிகிச்சை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது போல் பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிவது, ஆகியவற்றை கடைபிடிக்கவேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.