திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று 20.10.2020 துறைசார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் தெரிவித்ததாவது, கோவை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலிருந்தும் பெறப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளை முறையாக தரம் பிரித்து பெறவேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற வேண்டும். பொதுமக்களிடம்  மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தாமாகவே முன்வந்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டுமென சுகாதார பணியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

உணவகங்கள், வணிகவளாகங்கள், குடியிருப்புகள், கடைகள், மருத்துவமனைகளிலிருந்தும் பெறப்படும் மக்கும், மக்கா குப்பைக் கழிவுகளில் ஒரு நாளைக்கு 100 கிலோவிற்கு அதிகமாக இருந்தால் அவர்களே குப்பைகளை மேலாண்மை செய்து கொள்ள வேண்டும். மாநகராட்சி தகுந்த அறிவியல் சார்ந்த உதவிகளை செய்து கொடுக்கும். வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லும் குப்பைகளின் அளவை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் பணிகள் குறித்தும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகளை சரியான முறையில் திறந்தவெளியில் தரம் பிரித்த பின்னரே சேகரித்து வைக்க வேண்டும். குப்பைகள் குவியல்களாக குவித்து வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும், தூய்மையான மாநகராட்சியாக திகழ, சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.