குடிநீர் விநியோக ஆய்வுக்கூட்டம்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில் குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளையும், மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளையும் துரிதமாகவும், தரமானதாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகளையும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலைகள் செப்பனிடும் பணிகளையும் உடனுக்குடன் மேற்கொள்ளுமாறும், தூய்மைப் பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டுமெனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மணிகண்டன் நகர் மற்றும் காமராஜ் நகர், எம்.ஜி.ஆர். நகர், கோவைப்புதூர் டபிள்யூ-பிளாக், சிறுவாணி நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில் பழுதடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து சரிசெய்யும் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, செயற்பொறியாளர் ஞானவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் ரகுபதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் லட்சுமணன், குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் எஸ்.சம்பத், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், மற்றும் செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டார்கள்.