மழை: வரமா? சாபமா?

இரண்டு நாட்களாக தமிழகம், குறிப்பாக செய்தி ஊடகங்களின் முக்கிய செய்தி ‘வடகிழக்கு பருவமழை’தான். ஆயிரம், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வரும் வடகிழக்கு பருவமழைதான். சற்று தாமதமாகப் பெய்கிறது. அவ்வளவுதான். இதைவிட அதிக மழை பொழியும் சிரபுஞ்சி, ஆகும்பே சின்னக்கல்லார் எல்லாம் அமைதியாக இருக்கும்போது சென்னை மட்டும் பதறுகிறது. ஏன்?

ஏனென்றால், இயற்கைக்கு எதிராக மனிதன், ‘புத்திசாலித்தனம்’ என்று கருதிக் கொண்டு செய்த முட்டாள்தனங்கள்தான். தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள் அமைப்பது, மழைநீர் வடிகால்களை சரியாக அமைக்காதது, வாய்க்கால்கள், ஆறுகளை தொழிற்சாலை, வீட்டுக்கழிவுகள் என கொட்டி குப்பைக்கூள(வ)ங்களாக, சாக்கடைகளாக மாற்றியது, நீர்ப்பாதையில் குடியிருப்புகள் கட்டி ஆக்கிரமித்தது எனத் தொடங்கி பல இன்செயல்கள் இயற்கைக்கு எதிராக செய்துள்ளான். அதன் விளைவுதான் ‘மழையில் தத்தளிக்கும் சென்னை’ இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு இதுதான். பல இடங்களில் மழைத் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து இருக்கிறது.

அரசாங்கம் தனது சோதனைகளை முழு அளவில் களம் இறக்கியுள்ளது. சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. மொத்த சென்னை நகரமும் ஒரு தயக்கத்துடன்தான் நனைந்து காணப்படுகிறது. இரண்டு நாட்கள் இந்த நிலை நீடித்தால், இப்போதைய எந்த வசதிகளும் ஏற்பாடுகளும் போதாது என்றாகி விடும். கிட்டத்தட்ட மீண்டும் ஒரு வர்தா புயல் அலங்கோலம்தான்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது, ஏரிகளில் நீர் நிரம்புவது என்று எல்லா மழைக்கால அறிகுறிகளும் இருக்கின்றன. அத்துடன், இதைவிட பெரிய மழை வந்து பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து ஓர் அச்சமும் இருக்கிறது.

நவீன நகரமான சென்னையில் தண்ணீர்க்கதை இதுவென்றால் தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களின் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. சென்ற இரண்டு ஆண்டுகளாக வறட்சியில் வாடி விவசாயிகள் தற்கொலை செய்த நிலங்களை உள்ளடக்கியதுதான் இந்த மாவட்டங்கள். தற்போதுதான் சிறிது மழை கிடைத்து நாற்று நட்டு பயிர் பிடிக்கும் பருவம். இப்போது வந்துள்ள வடகிழக்கு பருவமழை வயல்களில் இடுப்பளவு தண்ணீரை நிற்க வைத்துள்ளது. இன்னும் இந்த நிலை இரண்டு நாள் நீடித்தால் பயிர்கள் வறட்சியால் கருகி இறந்ததுபோல, இப்போது நீரில் மூழ்கி காணாமல் போய்விடும். மறுபடியும் விவசாயி பட்டினி சாவு, கடன் தள்ளுபடி, உணவு உற்பத்தி பாதிப்பு என்று நிலை உருவாகும்.

ஒரு பக்கம் கனமழை, வெள்ளம், சேதம் என்று நகரத்திலும் பாதிப்பு, இன்னொரு பக்கம் விவசாயத்துக்கும் மழைநீர் பயன்படுவதில்லை. வருடம் முழுவதும் அண்டை மாநிலங்களிடம் நீருக்கு கையேந்தி வழக்கு, சச்சரவு, போராட்டம் எனத் தொடரும் சோகக்கதை. இன்னொரு பக்கம், இப்படி அதிக மழைநீர் தெருவெங்கும் ஓடி கடலில் கலந்து வீணாகவும் போகிறது. ஏன் இந்த நிலை? என்று அரசு தீவிரமாக யோசிக்க வேண்டும்.

இந்த நிலையை மாற்ற மாற்றுத்திட்டங்களை யோசித்து செயல்படுத்த வேண்டும். இதுவரை இருந்த ஏரி, குளங்களை மொத்தமாக கணக்கெடுத்து, கண்டறிந்து அவற்றை மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்ற வேண்டும். அந்த நீர்நிலைகளை இணைக்கும் கால்வாய்களை தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழுது நீக்கி பராமரிக்க வேண்டும். இதைச் செய்தாலே வெள்ள பாதிப்பில் பாதி குறைந்துவிடும். இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஏழ்மை, குடிசை என்று வாயால் பேசாமல் பல துணை நகரங்களையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். இதன் மூலம் நகரத்தில் குவியும் மக்கள்தொகை தடுக்கப்படும். அதிக மக்கள்தொகையால் உருவாகும் சேரிகளும் தாழ்வான பகுதி குடியேற்றங்களும் எண்ணிக்கையில் குறையத் தொடங்கும். நிலத்தடிநீர் மட்டமும் பெருகும். கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பஞ்சமும் குறையும்.

அதைப்போலவே விவசாய மாவட்டங்களிலும் வெள்ளத்தடுப்பு மற்றும் நீர் சேகரிப்பு முறைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏரி, குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் அரசாங்கம் என்ற நிர்வாக இயந்திரம் முழுமையாக செவி சாய்க்க வேண்டும். போடப்பட்ட திட்டங்களை செயல்களாக நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த திசையில் அரசாங்கத்தைத் திருப்பும் வகையில் மக்களின் கருத்தோட்டமும், செயல்பாடுகளும் இருக்க வேண்டும். அப்போதுதான் வடகிழக்கு பருவமழை மட்டுமல்ல, எட்டு திசையிலிருந்து மழை வந்தாலும் சமாளிக்க முடியும். இல்லாவிட்டால், ஐயையோ வர்தா மறுபடி வருமோ, சுனாமி மறுபடி வருமோ என்று நடுங்கிக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்த மழைநீர் சேகரிப்புத் திட்டங்களை, அவரது பெயரைச் சொல்லி இயங்கும் தற்போதைய அரசு, கவனத்தில் கொண்டு முறையாக, விரைவாக செயல்படுத்த வேண்டும். வெள்ளம், வெள்ளம் என்று வெறும் வாயால் பேசிக்கொண்டிருக்காமல் வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வெள்ள நிவாரணப் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

கோவையில் பெரும்பாலான ஆறுகள், குளங்கள் தன்னார்வலர்கள் மற்றும்  அதிகாரிகளால் தூர்வாரப்பட்டதைப் போல், சென்னையில் ஒன்றும் செய்யப்படவில்லை. இனிமேலாவது, அங்கிருக்கும் ஆறு, குளம், ஏரிகளைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றி மழைநீர் செல்ல வழிவகுக்க வேண்டும்.

இதற்கு பொதுப்பணித் துறையை விரைவாக செயல்பட வைக்க வேண்டும். மேலும், மின்சாரம் தாக்கி இறந்த இரண்டு சிறுவர்களின் மரணமே இறுதியாக இருக்க வேண்டும். அதற்கு மின்சாரத் துறையும் தனது அவசரகால பணியை உணர்ந்து வேகமாக செயல்பட வேண்டும். அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். மழை நீரை சேமிக்க நடவடிக்கை இதுவரை ஒன்றும் செய்யாவிட்டாலும், இனி மனித உயிர் சேதமோ, பொருள் சேதமோ இல்லாமல் பார்த்துக்கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் இன்றைய எதிர்பார்ப்பு.

கடும் வெயிலில் வாடி, தாகம் தீர்க்க தண்ணீர் இன்றி, விவசாயம் செய்ய நீர் இன்றி போராடிய, தவித்த தருணங்கள் கடந்துவந்தோம். பின்னர் மழை அதன் பருவகால பணியை செய்யும்போது வாடித் தவிக்கிறோம். இது யார் தவறு? மழை வரமா? சாபமா? மழை வரமே, அது வரும்போது சரியாக உபயோகப்படத்தினால். மழை சாபமே, அதனை வரவேற்கத் தயாராக இல்லாமல் அலட்சியமாக இருந்துவிட்டால். இனியாவது உணர்வோமா, மழையாக வரமாகப் பெறத் தயாராவோமா?!