மாநகராட்சியின் பரிசோதனை அறிவிப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலங்கள், கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தனியார் மருத்துவமனை ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென்ற மாநகராட்சி மத்திய மண்டல ஆணையரின் நோட்டீஸ்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டல ஆணையர் அவர்கள் தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்து, பதிவேடு பராமரிக்க வேண்டும், என்று நோட்டீஸ் விநியோகித்து வரும் மாநகராட்சியின் மத்திய மண்டல ஆணையரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாநில அரசு 4500 தீர்மானித்துள்ள நிலையில் தனியார் நிறுவனங்களில் 5 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்வதென்றால் ரூ,25000 செலவாகும், அதுவும் 15 தினங்களுக்கு ஒரு முறை என்றால் எத்தனை ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை கவனிக்காமல் நியாயமற்ற அறிவிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

மாநகர பகுதிகளில் உண்மையில் நோய் தொற்று குறைப்பது தான் மாநகராட்சியின் நோக்கம் என்றால், மாநகர பகுதியில் மாநகராட்சி பொறுப்பில் கூடுதல் ஆய்வு மையங்களை அமைத்தும், நடமாடும் ஆய்வு மையங்களை ஏற்படுத்தியும் அதன் மூலம் தனியார் நிறுவன ஊழியர்கள், கடைபணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும்.

இவ்வாறு நெருக்கடியான காலத்தில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது தனியார் ஆய்வகங்கள், மருத்துவமனைகள் லாபமீட்டும் வகையில் இம்மாதிரியான அறிவிப்புகளை வெளியிடும் கோவை மாநகராட்சியின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. எனவே மாநகராட்சி நிர்வாகமே தனியார் கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு  கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.