கோவையை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றினால் நேற்று உயிரிழப்பு

கோவையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த கொரோனா தொற்றால் உயிரிழப்பவரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதுவரை கோவையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று (22.7.2020) மட்டும் கோவையைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண், தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகள் வெளியாகும்  முன்பே உயிரிழந்தனர். தொடர்ந்து அவர்களது பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது.

இதேபோல், உக்கடம் திருமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த 46 வயதான நபர் ஒருவர் கடந்த 21ம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்பே அவர் பலியானார். தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் அவருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதியானது.

இவர்கள் தவிர, நாமக்கல் எருமைபட்டி பகுதியைச் சேர்ந்த 51 வயது ஆண் கொரோனா அறிகுறிகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்படி, நேற்று ஒரேநாளில் கோவையைச் சேர்ந்த 3 பேர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.