கொரோனாவால் காய்கறி வியாபாரி பலி

டி.கே மார்க்கெட் காய்கறி வியாபாரி ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக பலியானார்.

கோவை தியாகி குமாரன் டி.கே மார்க்கெடை சேர்ந்த காய்கறி வியாபாரியான 70 வயது முதியவருக்கு இதயம் தொடர்பான பாதிப்பு இருந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (17.7.2020) உயிரிழந்தார். முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து டி.கே மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக அடுத்த நான்கு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக தியாகி குமரன் மார்க்கெட் அனைத்து மற்றும் சில்லரை வியாபாரிகள்  சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மார்க்கெட் தற்காலிக மூடல் என்பது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் கூறும் நடவடிக்கைகள் பின்பற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் டி.கே மார்க்கெட்டில் மாநகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினித்  தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர மார்க்கெட்டில் உள்ள 500 வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய  ஆலோசிக்கப்பட்டு வருகிறது.