மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பு பணி விழிப்புணர்வு கூட்டம்

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கே.கே.புதூர் ஆரம்ப பள்ளி வளாகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கான கொரோனா தடுப்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது : சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழிகாட்டுதலின்படி கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலமாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள வெளியூர், வெளிமாநிலங்களிலிருந்து வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாத நபர்கள் குறித்தும், வயதானவர்கள், இருதய நோயாளிகள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களின் விபரங்கள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களை கண்டறிதல், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் சுயவிவரங்கள்  போன்ற தரவுகளை சேகரிக்கும் களப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், களப்பணியின்போது போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்தும், முகக்கவசங்கள், கையுறைகள் அணிந்து மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தகவல்களை சேகரிக்கும் பணிகளில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும். அந்தந்த பகுதிகளிலுள்ள காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் உள்ள நபர்களுக்கு பல்ஸ் மீட்டர் மற்றும் தெர்மல் ஸ்கேன் மூலமாக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.