நடனக் கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு

வாழ்வாதாரம் பாதித்த நடனக் கலைஞர்களின் ஸ்டூடியோவுக்கு இரண்டு மாத வாடகைக்கான விலக்கு அளிக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

கொரோனா மாதிரி வடிவமைப்பு உடையுடன் ஆட்சியரிடம் மனு வழங்கிய கோவை மாவட்ட நடனக் கலைஞர்கள் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வருமானம் இன்றி முடங்கி உள்ளோம். இதனை நம்பி உள்ள நடனக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்கும் நோக்கில் சேவ் & சப்போர்ட்  டான்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற அமைப்பைத் துவங்கி உள்ளோம். கடந்த  இரு மாதங்களாக இதன் மூலம் கிடைக்கப் பெற்ற உதவிகளைக் கொண்டு இத்தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கு உதவினோம்.

கோவை மாநகரில் 45 டான்ஸ் ஸ்டுடியோஸ் உள்ளன. அனைவரும் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் இரு மாதங்களுக்கு வாடகையில் விலக்கு அளிக்க வேண்டும். இதே போல் இந்தத் தொழிலை நம்பி மேக்கப் செய்யும் 25 குடும்பங்கள் உள்ளன. எனவே கூடிய விரைவில் நடன நிகழ்ச்சிகள் நடத்தத் தங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்றனர்.