அட்சய திருதியை தங்கம் வாங்குவதற்காக அல்ல, தானம் செய்வதற்காக

பரபரப்பாக ஒருவரை ஒருவர் பார்த்து கூட புன்னகைக்க முடியாத வேகத்தில் ஒவ்வொருவரும் மற்றவரை முந்தி செல்ல முயன்று கொண்டிருக்கின்றனர். இதில் பொதுநலம் என்ற ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் சுயநலமே மொத்த ரூபமாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, அட்சய திருதியை என்றால் தங்கம் தான் என்றும், அதனை வாங்குவதே அந்த ஆண்டின் லட்சியமாக கொண்டுள்ள சிலரும் உள்ளனர்.
இந்த அட்சய திரிதியை, நம் நாட்டின் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை போல நெடு நாள் வரலாறு இல்லாமல், சமீப காலமாக தான் மிக பிரபலமாக உள்ளது. அதுவும் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் அதிகமாகவே உள்ளது.

எல்லா பண்டிகைகளும் தனி அர்த்தத்தை கொண்டுள்ளது. அதேபோல் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்நாள் இதற்கானது அல்ல. பலர் தங்கம், வெள்ளி வாங்கி வீட்டில் பூட்டி வைத்து கொள்கிறோம். இதனால் செல்வம் பெருகாது.
இந்நாளில் தான் குசேலன் தனது நண்பனான கிருஷ்ணனை பார்க்க சென்றான். கிருஷ்ணனை பார்க்க சென்ற அவன் தனது குடும்பத்தின் நிலை குறி்த்து கூறி பொருள் உதவி பெற சென்றான். காரணம் இதுவாக இருந்தாலும், மனதில் நண்பனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.

அதோடு அவனுக்கென்று வைத்திருந்த அவுளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிருஷ்ணனுக்கு கொடுத்தான். தனக்கென்று வைத்திருந்த அந்த உணவையும் நண்பனுக்கு கொடுத்த அந்த உயர்ந்த உள்ளம் தான் குசேலனை செல்வந்தர் ஆக்கியது, அதாவது கிருஷ்ணன் குசேலனை செல்வந்தர் ஆக்கினார்.
அதேபோல் உங்களிடம் இருப்பதில் அள்ளி கொடுக்க வேண்டாம், கொஞ்சம் கிள்ளி கொடுத்தால் போதும். இந்த நன்னாளில் உணவில்லாமல் பசியால் வாடும் வயிற்றில் விழும் சில பருக்கைகள் உங்களது உழைப்பில் வந்ததாக இருந்தால் அதை விட பெரிய புண்ணியம் ஏதும் இல்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் வெளியில் வருவது சிரமம். அதனால் இதனை செய்ய முடியாது என்றில்லை. கண்ணில் படும் எந்த உயிரினம் ஆனாலும் அதன் பசி போக்கினாலே போதும்.

காகம், புறா போன்ற வாயற்ற பறவைகளுக்கும் தெருவில் நடமாடும் ஆடு, மாடு, நாய் போன்றவைகளின் பசி போக்குவது வரம் பெறுவதற்கு செய்யும் தவம் போன்றது.
தங்கம் வாங்கலாம், அதை இன்று தான் வாங்க வேண்டும் என்பது கிடையது. உழைத்து வாங்கும் தங்கம் என்று வாங்கினாலும் அதன் பலன் ஒன்றுதான்.

நடுத்தர மக்கள், வறுமை கோட்டிக்கு கீழ் உள்ள மக்களும் இந்நாளில் தங்கம் வாங்குவதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வைத்து பற்றாக்குறைக்கு கடன் வாங்கி தங்கம் வாங்குகின்றனர்.

இதுவும் ஒருவகையில் சரிதான் என்று தோன்றுகிறது.
ஆண்டு முழுவதும் ஒரே அளவிலான வருமானம் தான் வருகின்றது. ஆனால், எப்படியோ இந்நாளில் தங்கம் வாங்கி விடுகிறார்கள். இது கடனை வைத்தாலும் பெண் பிள்ளை வைத்திருக்கும் தாய்மார்கள் இதனை பெண் பிள்ளையின் எதிர்கால முதலீடாக தான் பார்கிறார்கள் என்பது ஒரு வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கம் வாங்கினாலும் சரி, தானம் செய்தாலும் சரி மன நிறைவேடு, நமக்கும் மற்றவர்களும் பயனுள்ளதாக செய்தால் எல்லாம் நன்மைக்கே.
இதனை இன்றைய குடிமக்கள் தெரிந்து கொள்வதை விட, நாளைய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

என்ன செய்தாலும் அதன் அர்த்தம் தெரிந்து செய்ய வேண்டும். அதன் படி இந்த அட்சய திரிதியையும் காரணம் தெரிந்து, புரிந்து செயல்படுங்கள்.