பூமி தாய்க்கு முதியோர் இல்லம் கிடையாது

இந்த உலகம் எப்பொழுது உருவானது என்று யாருகாவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள், இப்படி பட்ட பழமை வாய்ந்த இந்த உலகை இப்படி சீரளிப்பது தவறு என்று. 10 ஆண்டுகள் பின் பிறந்த 20ஸ் கால குழந்தைகள் 90ஸ் கால குழந்தைகள் பார்த்ததில் பலவற்றை பார்க்க முடியவில்லை ஏன்?.
நமது கற்பனையில் உலகம் இப்படி தான் இருக்கும் என்ற ஒரு பதிவு இருக்கும். அதாவது விண்வெளியில் இருந்து பார்த்தால் உலகின் கண்டங்களின் வடிவங்களும், கடல்களும் அதன் நிறங்கள் தெளிவாக தெரியும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியை சுற்றி செயற்கை கோள்கள் தான் தெரிகிறது என்பதை நிரூபிக்கிறது சில புகைப்படங்கள்.

நாம் கண்ணில் பார்க்காத நம்மை சுற்றி இருக்கும் விண்வெளியின் நிலையே இது என்றால், நம்மை சுற்றி இருக்கும் காடுகளும், மாலைகளும், கடல்களும் என்ன நிலையில் இருக்கும். ஒருபக்கம் காடுகள் கால் வெட்டப்பட்டு ஊனமாய் நிற்கிறது. மறுபுறம் ஏன் என்று தெரியாமல் துளிர் விடும் நெருப்பு.

வானில் இருந்து பார்த்தால் பனி மூட்டமாய் அழகாக காட்சி தரும் காடுகள் கூட உற்று பார்த்தால் காட்டு தீயால் கருக்கலைப்பு செய்யப்பட்டு வருகிறது.


மலைகளும் அறுவை சிகிச்சை செய்யபட்டு கூறு போட்டு விற்கப்படுகிறது. பாறைகள் உடைத்து கட்டிடம் கட்டவும், சிலை செய்யவும், பாறைகளை தூளாக்கி மண்ணாகவும் பயன்படுத்தப்படுகிறது. தலை உயர்ந்து பார்க்க வைத்த மாலைகளை கூட இன்று தலை குனிந்து பார்க்கும் அளவிற்கு பள்ளங்களாக மாற்றப்பட்டது.
கடல்களும் இதிலிருந்து விதிவிலக்கல்ல. கூட்டம் கூட்டமாக துள்ளி குதிக்கும் மீன்கள் வலைகள் என்று நினைத்து பிளாஸ்டிக் பைகளில் சிக்கிக்கொள்கின்றன. வலைகளில் சிக்கினால் கூட மற்றவர்களுக்கு உணவாகலாம், பிளாஸ்டிக் பைகளில் சிக்கி யாருக்கும் பயனில்லாமல் பரிதவித்து மரணிக்கின்றன. சில மீன்கள் இதனை உணவென்று நினைத்து உண்ணுகிறது. அதனால் இதனை உண்ணும் மற்ற உயிரினங்களும் இதனால் ஆபத்து ஏற்படுகிறது.


மாற்றம் ஒன்றே மாறாதது, ஆனால் இந்த உலகம் மட்டும் மனிதனால் தனது விருப்பத்திற்கேற்ப மாற்றப்பட்டு வருகின்றது. முந்தைய தலைமுறையினர் பார்த்ததை நாம் பார்க்கவில்லை, நாம் பார்த்ததை நாம் சந்ததியினர் பார்க்கமுடியாது. நாம் சந்ததியினரை போலவே இந்த இயற்கையையும் பாதுகாக்க வேண்டும்.

உலக பூமி தினமான அதுவும் 50 ஆவது ஆண்டான இன்று பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் வெறும் சாதாரண நிகழ்வு அல்ல. இது இயற்கையின் சுழற்சியை மாற்றி அமைக்கிறது. இயற்கையை நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் சீண்டி பார்க்கலாம். ஆனால், இயற்கை ஒரு முறை சீற்றம் கொண்டால் அதனை நம்மால் தாங்க முடியாது. இந்த பூமி அதில் வாழும் உயிரினங்களை பெற்றெடுத்த தாய். அதில் நாமும் ஒரு பிள்ளை. இந்த தாயை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடியாது. மீறி நினைத்தால் விளைவுகள் கற்பனைக்கும் எட்டாத நிகழ்வை நாம் சந்திக்க நேரிடும்.
பச்சை நிறங்கள் பாதி குறைய,
இச்சை நிறங்கள் மீதி நிறைய,
கண்ணில் படுவது பச்சையா? இச்சையா?
இது நாம் கையில் தான்…