இன்று முதல் செயல்பாட்டிற்கு வரும் கெரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு மையம்

கெரோனா நோய் தொற்று கண்காணிப்பு மையம் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை. கருமத்தப்பட்டி, கிட்டாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கெரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தகவல்.

கோவை விமானநிலையத்திற்கு வரும் பயணிகளில் சளி, காய்ச்சல், தும்மல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நபர்களை 14நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள உலக சுகாதார மையத்தின் வழிகாட்டுதலின்படி, கருமத்தம்பட்டியிலுள்ள தேஜா சக்தி தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் பார்வையிட்டார்.  இவ்வாய்வில்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அசோகன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மருத்துவர் கிருஷ்ணா, துணை இயக்குநர் மருத்துவர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள விரிவான அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துறைகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொடர்பாக சோதனை செய்வதற்கு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகளுடன் வருபவர்களை அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவசிகிச்சை மேற்கொள்ளவும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறியவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வந்த 10 பேர் அரசு மருத்துவமனையில் இதுவரை அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போதுவரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை.

மேலும், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் வருபவர்களில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே காசநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி 14 நாட்கள் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக ஒரு மையத்தினை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகில் தேஜா சக்தி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கொரோனா கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 14 நாட்கள் அனுமதிக்கப்பட்டு 24மணிநேரமும் தொடர்ந்து மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்படும். 14 நாட்களுக்கு பிறகும் நோய் இல்லாத நிலையில் கண்காணிப்பு மையத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள். இம்மையத்தில் உணவகம், சமையலறை, தகவல் மையம் மற்றும்  50 படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த மையம் அமைந்துள்ளது. இம்மையம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 5 நபர்கள் கொண்ட 4 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும். தேவையின் அடிப்படையில் இம்மையத்தில் அதிகப்படியான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவக்குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

இம்மையம் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை. கெரோனோ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தினால் முழுவீச்சில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  கொரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், பொதுவெளிகளில் வதந்திகள் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தகவல் அளிக்கவும், தகவல் பெறவும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 1077 என்ற  கட்டணமில்லா தொலைப்பேசி எண் கொண்ட கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் அறிகுறிகள் குறித்து மருத்துவக்குழுவினாரால் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.