முதல் முறையாக மனிதர்கள் மீது கொரோனா தடுப்பூசி பரிசோதனை

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் சுனாமியை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதற்காக உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு, மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸை முறியடிக்கும், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து என எதுவும் இதுவரை இல்லை. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும், மசாசூசெட்ஸ் மாநிலத்தில் செயல்படும் கேம்பிரிட்ஜின் மாடெர்னா என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன.

mRNA-1273 எனக் குறிப்பிடப்படும் இந்த தடுப்பூசி மருந்தின் சக்தி, கொரோனா வைரஸை முறியடிக்கும் திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக மனிதர்கள் மீதான பரிசோதனையும் தொடங்கியுள்ளது.

தாங்களாக முன்வந்த, 18 முதல் 55 வயது நிரம்பிய ஆரோக்கியமான 45 பேரை தேர்வு செய்து, 6 வாரங்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

சியாட்டில் நகரில் நடைபெற்று வரும் இந்த பரிசோதனை திட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களில் முதலில் ஒருவருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. முதல் கட்ட பரிசோதனை என்பது சாதனை வேகத்தில் தொடங்கியுள்ளதாகவும், விரைவாக தடுப்பூசி மருந்தை நடைமுறைக்கு கொண்டுவருவதே நோக்கம் என அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

மனிதர்கள் மீதான கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கி விட்டாலும், பாதுகாப்பானதுதான் என உறுதிப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.