“சாதிக்கலாம் வாங்க”

கோவை கேபிஆர் கல்வி நிறுவனங்கள் இணைந்து, சின்னியம்பாளையம், பிருந்தாவன் அரங்கத்தில், அண்மையில் “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் 10,11,12 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பை இனிதே நடத்தியது. இந்நிகழ்வில் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியின் முதல்வர் பாலுசாமி, குழந்தைகளின் வாழ்க்கையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள் என்று கூறி விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றார்.

விழாவிற்குத் தலைமையுரை வழங்கிய சின்னியம்பாளையம் நுகர்வோர் சங்கத்தின் தலைவர் தேவராஜ் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அறிவிற் சிறந்த சான்றோர்களுக்கு ஈடாகமாட்டார்கள் ஆகவே மாணவர்கள் அறிவிற்சிறந்த சான்றோர்களாக கற்றுத்தேர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்று கூறி தலைமையுரை வழங்கினார்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த தமிழ்ச்செம்மல் சிந்தனைக்கவிஞர் கவிதாசன், “நீங்களும் சாதிக்கலாம்” என்ற தலைப்பில், கல்வியின் நோக்கம் மனிதநேயத்தை கற்றுக் கொடுப்பதுதான். நமக்கான சிறந்த வாழ்க்கைக்கு  நாம் தான் பொறுப்பு. ஆகவே ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். உழைப்பில்லாத ஒருவனின் வாழ்க்கை உயராது. தலைகுனிந்து நாம் படிப்பது நம் குடும்பம் தலைநிமிர்ந்து நடப்பதற்காகத்தான். 3 மணிக்கு எழுபவன் முனிவன், 4 மணிக்கு எழுபவன் ஞானி, 5 மணிக்கு எழுபவன் அறிஞர், 6 மணிக்கு எழுபவன் மனிதன். லட்சியம் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப் போல அது காற்றிற்கு அசையலாம். கரையைச் சென்றடையாது வெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் நிதானம் அவசியம், எது வந்தாலும் தன்னம்பிக்கை அவசியம். முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை தான் வெல்லாது என்று கூறினார். முடிந்தவரை முயற்சிப்பது முயற்சியல்ல. முடிக்கும் வரை முயற்சிப்பதே முயற்சி.

மாணவர்கள் 1. ஒழுக்கம், 2. துணிச்சல் 3. முயற்சி, 4. தன்னம்பிக்கை, 5. தனித்தன்மை. என்ற இந்த 5 பண்புகளை வளர்த்துக் கொண்டால் சிப்பிக்குள் இருக்கும் முத்தைப்போல் விலைமதிப்பற்றதாக மாறிவிடுவார். கடின உழைப்பே என்றும் வாழ்க்கையில் வெற்றியைத் தரும். தன்னம்பிக்கையே கடின உழைப்பிற்கு ஆதாரமாகும். ஆகவே தன்னம்பிக்கையோடு கூடிய கடின உழைப்பிற்கு மாணவர்கள் தயாராக வேண்டும்’ என்றார். ‘விடியல் என்பது வெளியில் இல்லை. உன் விழியில் உள்ளது’ என்றும், பிறந்ததும் கிடைப்பது தாலாட்டு, இறக்கும்போது கிடைப்பது நீராட்டு, இடையில் நாம் வாங்கவேண்டும் பாராட்டு என்றும் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினராக வருகை தந்த திரைக்கலைஞர் கலைமாமணி ஞானசம்பந்தன் சிகரம் தொடு என்ற தலைப்பில், செவிச்செல்வமே சிறந்த செல்வம். ஆகவே கேட்கக்கூடிய கருத்துக்களை உள்வாங்கி நம் வாழ்க்கையில் பின்பற்றவேண்டும். அனைத்து மாணவர்களையும் வெற்றியாக்கும் திறமை ஓலீ ஆசிரியரிடம் மட்டுமே உள்ளது. ஆகவே ஆசிரியராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்து குழந்தைகளும் பிறக்கும்போது அறிவாளிகள் தான். ஆனால் அந்த அறிவை மேம்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களே சாதனை படைக்கிறார்கள். தோல்வி வரும்போதெல்லாம் துவண்டுவிடாமல் முயற்சியோடு முன்னேற வேண்டும். எந்த எண்ணம் நம்மை ஊக்குவிக்கிறதோ அந்த எண்ணம் கண்டிப்பாக நம்மைச்செயல்படுத்தும். எந்தச் செயலை யார் முடிப்பார்கள் என்று ஆராய்ந்து அந்தச்செயலை அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும். பசித்திரு (சாதிக்கவேண்டும் என்ற எண்ணம்), தனித்திரு (தனித்தன்மை), விழித்திரு (வாய்ப்பைத்தேடுதல்) என்ற கருத்தை  அடிப்படையாக வைத்து உழைத்தால் பதவி என்ற வெற்றி கண்டிப்பாகக் கிடைக்கும். மேலும் மாணவர்கள் அவர்களுக்குள் உள்ள திறமையைக் கண்டுபிடித்து வெற்றியடைய வேண்டும் என்றும் சுவாமி விவேகானந்தர்.சி.வி.ராமன். ஜெகதீஸ் சந்திரபோஸ், தாமஸ் ஆல்வா எடிசன், ஸ்டறிவ் ஜாப்ஸ், ஜான் கு.கென்னடி, பில் கிளிண்டன்,  உசைன் போல்ட் போன்ற மனிதர்களின் வாழ்க்கையைக் கூறி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தினார். இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை

விழாவின் நிறைவாக நன்றியுரை ஆற்றிய முறிசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் உதவிப்பேராசிரியர் விவேகானந்தன் நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறி நிறைவுரை வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளிலிருந்து சுமார் 1200 – க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கிய இந்நிகழ்வு நாட்டுப் பண்ணோடு இனிதே நிறைவடைந்தது.