கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் அகிலா கல்லூரியின் முதன்மைச் செயலர் ஏ.எம்.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் அகிலா பேசுகையில், இக்கல்லூரி தன்னாட்சி பெற்ற பின் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்குத் தேவையான துறை சார்ந்த பல்வேறு நவீனத் தொழில்நுட்பப் பாடங்களை வழங்கிவருகிறது. அதற்குத் தேவையான ஆய்வக வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மாணவர்கள், இங்கு பயிலும் நாட்களில் நேரத்தை முழமையாகப் பயன்படுத்தி தங்களது படிப்பு மற்றும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முதன்மைச் செயலர் ஏ.எம்.நடராஜன் பேசுகையில், மாணவர்கள் தொழில்துறையுடன் தொடர்பு வைத்திருக்கவேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை அறிந்து, அதில் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

சிறப்பு விருந்தினர் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில், இங்கு பயிலும் மாணவர்கள் ஐ.ஐ.டி போன்ற முன்னணி நிறுவனங்களில் பணிநியமனம் பெற தங்கள் துறையில் உள்ள அதி நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அதில் வேலை செய்யும் திறன் இருந்தால் நிச்சயம் அனைவருக்கும் சிறந்த வேலை கிடைக்கும் என்றார். நாடு இப்போது இண்டஸ்ட்ரிஸ் 4.0 என்ற தொழில்புரட்சியில் உள்ளது. தொழில்புரட்சி என்பது ஒரு துறையில் பயன்படும் தொழில்நுட்பத்தின் பெரும்பகுதியை மாற்றி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகும். படித்த மாணவர்கள் வேலை கிடைக்கப் போராடிக்கொண்டிருக்கும் போது, தொழில் நிறுவனங்களில், திறமையான ஆட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்த இடைவெளியைப் போக்க தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் படிப்பு மற்றும் திறமைகளைத் தாண்டி அந்தந்த துறை சார்ந்த தொழில்நுட்பத்தையும் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

பொறியியல் மாணவர்கள் தங்களது படிப்புடன் கூடுதலாக பிசினஸ் அனலிடிக்ஸ், காமர்ஸ் போன்ற படிப்புகளை படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் அதேபோல் சக ஊழியர்கள், மக்களுடன் பழகும் திறமையையும் வளர்க்க வேண்டும். மேலும் ஒவ்வொரு கூட்டு முயற்ச்சியிலும் வேறு வேறு நபர்களுடன் சேர்ந்து பணிசெய்யும் தன்மையும், திறமையையும் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதற்குப் புதிதாக உள்ள மொபைல் அப்ளிகேஷன்களைப் பட்டியலிட்டு, அதை மாணவர்கள் டவுன்லோடு செய்து அதில் பயிற்சி செய்ய வேண்டும் என்றார். அதேபோல் புரோகிராமிங் லாங்வேஜ் போன்ற தொழில்நுட்பங்களை மொபைல் அப்ளிகேஷன் ழூலம் டவுன்லோடு செய்து அதில் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்றார்.

மேலும் தேசிய பன்னாட்டு  பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் ஆன்லைன் படிப்புகளை படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றார். வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள பல்வேறு நாடுகளைக் கண்டறிந்து, அந்த மொழியை கற்று, அங்கு வேலைக்கு முயற்ச்சித்தால் எளிதில் வேலைவாய்பைப் பெற முடியும். மேலும் மாணவர்கள் எந்த நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு சென்றாலும் அந்த நிறுவனத்தைப்பற்றியும், அதன் நிர்வாகம், அமைப்பு, அமைவிடம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள், வேலை செய்யும் ஊழியர்கள் போன்ற பல்வேறு தகவல்களையும் தெரிந்திருக்கவேண்டும். திறன் பெற்ற மாணவர்கள் மிக எளிதில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறமுடியும் என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.