‘இயற்கை காவலர் விருது’ பெற்ற சமூக ஆர்வலர் அன்பரசன்

கோவையில் நடைபெற்ற திருக்குறள் பயிற்சி வகுப்பு விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனர் அன்பரசன் அவர்களுக்கு கோவை இயற்கை காவலர் விருதை சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் வழங்கி  கவுரவித்தார்.

கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி பள்ளியில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 ஆண்டுகளாக உலக பொதுமறையான திருக்குறள் பயிற்சியை கணபதி தமிழ்சங்கத்தை சேர்ந்த நித்யானந்த பாரதி நடத்தி வருகிறார். இந்த திருக்குறள் பயிற்சி வகுப்பு துவங்கி 850 வார நிறைவு விழாவை முன்னிட்டு சிரவையாதீனம் கவுமார மடாலயத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  திருக்குறள் ஒப்புவித்தல், எழுதுதல், குறள் தொடர்பான ஓவியம், கதை, கவிதைப் போட்டிகள் நடைபெற்றது. இதற்கான பரிசளிப்பு விழா சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கவுமார மடாலய அரங்கில் நடைபெற்றது.

இதில்  அம்மா பீடத்தின் நிறுவனர் ஆவடி குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனர் அன்பரசன் பேசுகையில், இது போன்று மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட அளவில் நடைபெறும்  போட்டிகள் இனி மாநில அளவில் கோவையில் நடத்தப்பட வேண்டும் என கேட்டு கொண்டார். தொடர்ந்து விழாவில் திருக்குறள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அன்பரசனுக்கு கோவை இயற்கை காவலர் விருதை தவத்திரு சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் வழங்கி கவுரவித்தார். பின்னர் பேசிய அவர்,கோவையில் தொடர்ந்து இயற்கை சார்ந்த ஆர்வலராக சேவைகள் செய்து வரும் நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனருக்கு இந்த விருது வழங்கி கவுரவித்ததாக அவர் தெரிவித்தார்.