புளூ வேல்’ கேமை முறியடிக்க புது கேம்

கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியின் மாணவர்களும், போலீசாரும் இணைந்தும், கொலைக்கார, ‘புளூ வேல்’ கேமை முறியடிக்க, புதிய கேமை உருவாக்கி உள்ளனர்.கேரள மாநிலம், கன்னூரில் உள்ள ஆம்பிஷியஸ் காலேஜ் ஆப் அட்வான்ஸ் ஸ்டெடிஸ் என்ற கல்லூரியை சேர்ந்த மாணவர்களும், சக்கரகல் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் பிஜு என்பவரும் சேர்ந்து இந்த புதிய கேமை உருவாக்கி உள்ளனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் பிஜு கூறியதாவது:
இந்த கேமின் முதல் நிலையில், மாணவர்கள் தங்கள் தாயின் கன்னத்தில் முத்தமிட வேண்டும் என உத்தரவிடப்படும். அடுத்த நிலையில் நாங்கள் பரிந்துரைக்கும், 10 வகையான புத்தகங்களை படிக்க வேண்டும். மூன்றாவது நிலையில், மாணவர்கள் முதியோர் இல்லம் அல்லது அனாதை இல்லத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு அடுத்த நிலையில், மாணவர்கள் சுற்றுலா செல்ல அறிவுறுத்தப்படுவர். அதற்கு அடுத்த நிலையில் சேற்று நிலத்தில் விளையாட வேண்டும் என உத்தரவிடப்படும். அதன் பிறகு, மாணவர்கள் முதியோருடன் சேர்ந்து பழக வேண்டும், புற்றுநோய் சிகிச்சை மையம் அல்லது வலி நிவாரண சிகிச்சை மையத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படும்.

எட்டாவது நிலையில், மாணவர்கள் தங்களின் பள்ளி ஆசிரியர்களை சந்தித்து உரையாட வேண்டும். ஒன்பதாவது நிலையில், கடினமான பணி செய்து, ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும். இதையெல்லாம் முடித்த பிறகே, 10வது நிலைக்கு செல்ல முடியும். 10வது நிலைக்கு தேர்வானவர்கள், ஒரு மாத காலம் கல்லூரியில் தங்க வேண்டும். மொபைல் போன் பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே லேண்ட் லைன் போனை பயன்படுத்தலாம்.

நேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அவர்கள், சமைத்தல், சுத்தம் செய்தல், படித்தல், இசை கேட்டல் உள்ளிட்ட பல பணிகளை செய்ய வேண்டும்.இன்னும், 10 நாட்களில் இந்த புதிய கேம் செயல்பாட்டுக்கு வரும். 20 மாணவர்கள் இதை விளையாட முன்வ ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.