எழுந்து நடப்பவனுக்கு திசையெல்லாம் கிழக்குத்தான்!

சந்தித்தேன்… சிந்தித்தேன்…

 

என்னைச் சிந்திக்க வைத்த சந்திப்புகள் குறித்து தி கோவை மெயில்’ வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் புதிய தொடர் இது! வாரா வாரம் உங்கள் நெஞ்ச அரங்கில் நின்று பேசும் முயற்சி இது. இருளைக் கிழிக்கும் வெளிச்சக்கீற்றுகளுக்கு நான் கொடுக்கும் அங்கீகாரம் இது.

 

கிழக்குவாசல் உதயம்

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா

களிபடைத்த மொழியினாய் வா வா வா

கடுமை கொண்ட தோளினாய் வா வா வா

 

என்றார் மகாகவி பாரதி. ஒரு தேசத்தின் வளத்தையும் வளர்ச்சியையும் தீர்மானம் செய்பவர்கள் அந்த தேசத்தின் இளைஞர்கள் என்றால் அது மிகையாகாது. வெள்ளை இருட்டை விரட்டியடித்து, சுதந்திரக் காற்றை நாம் சுவாசிப்பதற்காக உயிரையும் துச்சமென மதித்து சுதந்திரப் போராட்டத்தில் குதித்து இன்னுயிர் ஈந்த இலட்சக்கணக்கான இளைஞர் களுக்கு நாம் என்றும் செலுத்த வேண்டும் வீரவணக்கம். கொடிகாத்த திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் என பட்டியல் நீளும். நெஞ்சுரமும், சிந்தனையில் தெளிவும், தேசபக்தியும், சமுதாய அக்கரையும் கொண்ட இளைஞர்களால் தேசத்தின் போக்கையே மாற்றமுடியும். ஏன் இந்த பூமி உருண்டையையே புரட்டிப் போடமுடியும் என உறுதியாக சொல்லமுடியும்.

சமீபத்தில், கோவைக்கும் எழில் சேர்க்கும் சின்னத்தடாகம், இளைஞர்கள் இணைந்து தொடங்கியுள்ள “கிழக்குவாசல் நண்பர்கள் நற்பணி மன்றம்“ என்ற மக்கள் நலஅமைப்பின் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

சின்னத்தடாகம் மலைகளால் சூழப்பட்ட அழகிய கிராமம். உழைக்கும் மக்கள் நிறைந்த மண். ஆம், வியர்வைப் பூக்களில் வெற்றித் தேன் எடுக்கும் விவசாயிகள் வாழ்ந்தார்கள். முன்பு தஞ்சை நெல்லுக்கு இணையாக, மஞ்சள், சோளம் விளைந்த பூமி. இப்பொழுது செங்கல் தொழிற்சாலைகள் நிறைந்த தொழிற்கூடமாக மாறியுள்ளது. செங்கல் உற்பத்திக்குத் தேவையான மண்வளம் உள்ளதால் இங்கு உற்பத்தியாகும் செங்கலுக்கு நல்ல மார்கெட் உள்ளது என்பதோடு, மண்ணை வெட்டிய பகுதியில் மழைநீர் தேங்கி நிறைவதால், நிலத்தடி நீர் எப்பொழுதும் குறைவதில்லை. கோடையிலும், இவ்வூரில் மட்டுமல்ல, இதனைச் சுற்றியுள்ள கிராமங்களும் குடிநீருக்குப் பஞ்சம் ஏற்படுவதில்லை என்று, கிழக்குவாசல் நண்பர்ககள் நற்பணி மன்றத்தின் தலைவர். திரு.கனகராஜ் என்னிடம் பெருமையுடன் கூறினார்.

கிழக்குவாசல் நண்பர்கள் அமைப்பின் தொடக்கவிழாவிற்குச் சென்ற போது, மலரும் நினைவுகளில் நான் மலர்ந்தேன். தாய்மடியில் தவழ்வதுபோல ஓர் உன்னத உணர்வில் நெஞ்சம் நிறைந்தேன். சேரனின், “ஆட்டோகிராப்” படம் பார்க்கும் போதெல்லாம், ஒவ்வொருவருக்கும், தங்கள் பள்ளிகால நிகழ்வுகள் நெஞ்சில் அரங்கேறுவது இயற்கைதான். அதுபோலதான் எனக்கும்.

சின்னத்தடாகம் அரசு உயர்பள்ளியில்தான் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நான் படித்தேன். இன்று சிகரம் தொட அகரம் தந்த அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், புலவர் அப்பாவு, புலவர் செ.ஜெயபால், திரு.ராஜமாணிக்கம், திரு.பெருமாள்சாமி, திரு.வேலுச் சாமி ஆகியோரை எப்பொழுதும் வணங்குவேன்.

கிழக்குவாசல் நண்பர்கள், அனைவரும் இளைஞர்கள்! வயது இருபதுகளில் இருப்பவர்கள் மட்டுமே இளைஞர்கள் அல்ல, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள், 80 வயதுகளில் இருந்தாலும் அவர்களும் இளைஞர்கள் தான். இளமை என்பது வயது சம்பந்தப்பட்டது அல்ல, அது மனம் சம்பந்தப்பட்டது, ஆற்றல் சம்பந்தப்பட்டது, இயக்கம் சம்பந்தப்பட்டது.

இன்றைய சமுதாயத் தேவை என்னவென்று சிந்திக்கும்போது, முதலில் தோன்றுவது, ஆற்றல்மிக்க, தன்னலமற்ற தலைவர்கள் தேவை என்பதுதான். நமக்கு வழிகாட்டுகிற தலைவர்கள் மட்டும் போதாது! வாழ்ந்து காட்டுகிற தலைவர்களூம் வேண்டும். பொதுநலமும், தேசப்பற்றும் கொண்ட இளைஞர்கள் இணைந்தால், நிகழ்கால சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் அழுக்கை வெளுத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நாம் வாழும் சுற்றுசூழல், மாசுபட்டு வருவதோடு, இயற்கையும் பெரும் அளவில் அழிக்கப்பட்டு வருகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது நமது வாழ்க்கை. பஞ்சபூதங்கள் சீற்றமடைந்தால், மாசுபட்டால், மனித வாழ்க்கை மட்டுமல்ல, எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் கேள்வி குறியாகிவிடும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆகவே சுற்றுசூழலை மேம்படுத்த இயற்கை வளத்தை பேண வேண்டிய தருணம் இது.

மேலும் படிப்பில் ஆர்வமும் திறமையுள்ள, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி ஊக்கம் கொடுத்தால், படித்த இளைஞர்களுக்கு, அவரவர் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு வகை செய்தல், மருத்துவம் சுகாதாரம் ஆகிய வற்றில் விழிப்புணர்வு உண்டாக்குதல், கலாச்சாரம், பண் பாடு ஆகியவற்றைப் பேணிக் காத்து அடுத்த தலைமுறைக்கு போதித்தல், மரக்கன்றுகளை நட்டுவளர்த்தல், என பன்முக நோக்குடன் தொண்டாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ள கிழக்குவாசல் நண்பர்களுக்கு, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சொல்வோம் ஒரு சபாஷ்!

வேகமும் விவேகமும் ஒருங்கே இணைந்துள்ளதைப் போல விரிந்த மனத்துடன் சுறுசுறுப்பாக இயங்கும், இம்மன்றத்தின் செய்லாளர் திரு.கணேஷ் அவர்களால் நிறையவே சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஒளிரத் தொடங்கியது. நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்த ஆற்றல்மிகு நண்பர் திரு.ஸிக்ஷிசி நடராஜன் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம் நானும், கலைக்கவிஞர் திரு.கோட்டீஸ்வரன் மற்றும் அன்புநதி அசோகன் அவர்களும்!

மலர்ந்த நினைவுகளில் மணந்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி…. தொடரட்டும் நற்பணி! ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற அமைப்புகள் உருவாக வேண்டும் என்பதே விருப்பம்.

படுத்துக் கிடப்பவனுக்கு பகல்கூட இரவுதான் எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெல்லாம் கிழக்குத்தான்! இருளை விமர்சிப்பதை விட விளக்கு ஏற்றுவதே சிறந்தது. சிறுசிறு முயற்சிகள் மூலம் சிகரங்களைத் தொடமுடியும் என்பது உறுதி.

மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.

 

– சிந்தனைக் கவிஞர். டாக்டர்.கவிதாசன்,

இயக்குனர் மற்றும் தலைவர், மனிதவள மேம்பாட்டுத்துறை,

ரூட்ஸ் நிறுவனங்கள்.