கே.பி.ஆர். நிறுவனம் சார்பில் ரூ. 2 கோடி கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கே. பி. ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் நடப்பு கல்வியாண்டில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான உதவித்தொகை என பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 952 மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்வில் பங்கேற்ற கே. பி. ஆர். குழுமங்களின் தலைவர் கே. பி. ராமசாமி அடுத்த கல்வியாண்டில் மாணவ மாணவிகளுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய் அளவிற்குக் கல்வி உதவித்தொகையை அறிவித்தார். அப்போது அவர் பேசுகையில், இங்குப் பயிலும் மாணவர்கள் இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்தி, தங்களது அறிவுத்திறனை மேம்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களில் மிக உயர்ந்த இடத்தில் பணிபுரியவும், தொழிலதிபர்களாகவும் உருவாக உதவும் எனக் கூறினார். கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கல்வி உதவித்தொகை வழங்கி வருவதாகக் கூறினார்.

மேலும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட  கவிஞர் முத்தையா பேசுகையில், ஒவ்வொரு மாணவரும் தங்களது துறைகளில் முழுமையாக ஆழமாக கற்று அதை சமூகப்பயன்பாட்டிற்கு கொண்டுவருவதன் மூலம்தான் ஒரு முழு பொறியாளனாக வளரமுடியும், அது இந்த கல்லூரியில் சாத்தியப்படும் என்று பேசினார்.

இதையடுத்து, கல்லூரியின் முதல்வர் ராமசாமி பேசுகையில்,  ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கி வருவதாகவும், இங்குப் பயிலும் மாணவர்களுக்கு துறைவாரியான மேம்பட்ட தொழிநுட்பத்தை கற்பிப்பதிலும், தரமான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதிலும் தனிக் கவனம் செலுத்திவருவதாகத் தெரிவித்தார். அதைப் பயன்படுத்தி மாணவர்களும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருவதை எடுத்துரைத்தார்.”