ஜி.எஸ்.டி.ன்னா என்னங்க?

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையைப் பற்றி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்Õ என்பதுபோல சொல்ல வேண்டுமானால், ஒரே நாடு, ஒரே வரி என்று சுருக்கமாக கூறி விடலாம். ஆனால் வார்த்தையில்  சொல்வதுபோல நடைமுறையில் அவ்வளவு எளிமையான விஷயமல்ல ஜி.எஸ்.டி. (கூட்ஸ் அண்ட் சர்வீசஸ் டேக்ஸ் என்பதுதான் ஜி.எஸ்.டி.)

சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்றாக இந்த சரக்கு மற்றும் சேவை வரியைச் சொல்லலாம். ஆனால் இது முழுக்க முழுக்க தொழில், வணிகத் துறையினர் தொடர்புடையதாக இருந்தாலும்கூட சமீப காலத்தில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பு இழப்பு நடவடிக்கையைப்போல இதுவும் கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லா தரப்பு மக்களையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கும் வல்லமை படைத்தது.

கிட்டத்தட்ட பத்தாண்டு களாக பல வாத, பிரதி வாதங்கள், ஆலோசனைகள், திருத்தங்கள் இவற்றுக்குப் பிறகு வரும் ஜுலை 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர இருக்கிறது. பட்ஜெட்டில் எப்படி எந்த பொருளுக்கு என்ன வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருக்குமோ அதுபோல இந்த ஜி.எஸ்.டி. குறித்தும் ஒரு எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது. அதுகுறித்து ஆதரித்தும், எதிர்த்தும் விவாதங்கள் நடந்து வந்தன. அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடி எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி விகிதம் என்பதை அறிவித்திருக்கிறது.

ஜவுளி, காலணிகள், தங்கம் போன்ற விலை மதிப்பு மிகுந்த உலோகங்கள் போன்ற சில பொருட்களுக்கு வரிவிகிதம் அறிவிக்கப்படாவிட்டாலும் மிகப் பெரும்பாலானவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதம் அறிவிக்கப்பட்டு விட்டது.

5%, 12%, 18%, 28% என்று நான்கு விதமான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் வரிவிதிப்பு இல்லாத பொருட்களும், சேவைகளும் பிரித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் என்ன பயன்? எதற்கு இந்த ஜி.எஸ்.டி?

மத்திய அரசாங்கம் ஒரு புறம் விற்பனை வரி, சேவை வரி, கலால் வரி என்று சில பொருளுக்கு வரி விதிக்கும். அதைப்போல மாநில அரசாங்கம் விற்பனை வரி, நுழைவு வரி என்று மொத்தமாக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வரி விதிப்புகள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த ஜி.எஸ்.டி மூலம் அவை அனைத்தும் உள்ளடக்கிய, ஒரு கூரையின்கீழ் வசூலிக்கப்படும் ஒரு வரியாக இந்த ஜி.எஸ்.டி. வரி அமைந்துள்ளது. இதனால் சில மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படும். அதுபோன்ற சிக்கல்களையும் ஈடுகட்டும் வகையில் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முதன்முறையாக வரி விதிப்பு என்பது மிக வெளிப் படையானதாக இருக்கும் என்பதோடு ஒரே நடைமுறையுடன் எளிமையானதாகவும் இருக்கும். எந்த பொருளுக்கு வரி உண்டு. எந்த பொருளுக்கு வரி இல்லை என்பதை சாதாரணமாக அனைவருக்கும் புரியும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக வரிக்குமேல் வரி வசூல் செய்யும் நிலைமை இருக்காது.

எடுத்துக்காட்டாக, ஆடு, மாடு போன்ற உயிருள்ள விலங்கு களை விற்பதற்கு வரி கிடையாது. ஆனால் குதிரைக்கு பன்னிரண்டு சதம் வரி விதிப்பு உண்டு. மீன், மாமிசம் போன்றவற்றுக்கு வரி விதிப்பு இல்லை. ஆனால் பதப்படுத்தப்பட்ட மாமிசம், மீன் வகைகளுக்கு வரி விதிப்பு உண்டு. பாலுக்கு வரி கிடையாது. பால் பவுடர், யோகர்ட் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கு ஐந்து சதவீதம் வரிவிதிப்பு உண்டு. சுமார் இருநூறு பக்கங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள், பொருட்கள் மற்றும் வரி விகிதம் என விவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள சிக்கல்கள் என்ன?

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள்தான் இதில் முதலில் வரும். சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையிலும் ஏராளமான படிவங்கள், விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. பெரிய நிறுவனங்கள் தங்களது அறிவுசார் பணியாளர்கள் மூலம் எளிதில் இம்முறைக்கு மாறிக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாத சிறுதொழில் முனைவோரும், சிறு வணிகர்களும் அவ்வாறு எளிதில் மாற முடியாது. அதற்காக ஜி.எஸ்.டி. முறைக்கு மாறாமல் இருக்கவும் முடியாது. அப்படி முடியாமல் இருந்தால் அது எதிர்காலத்தில் தண்டனைக்கு வழி வகுக்கும். தற்போதைய சூழலில் இருபது லட்சம் ருபாய்க்கு மேல் மொத்த வணிகம் செய்பவர்கள் எல்லோரும் இதன் கீழ்வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சில பின்தங்கிய மாநிலங்களில் இந்த தொகை பத்து லட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் இந்த தொகை மிகவும் குறைவு என்பது பலரின் அபிப்ராயம்.

அரசாங்கம் தயாரான அளவுக்கு மக்களும், தொழில் துறையினரும், வணிகத் துறையினரும் தயாராக இல்லை என்பதே இன்றைய நிலை. தற்போதுள்ள உற்பத்தி செய்யும் இடத்தில் வரி செலுத்தும் நிலை மாறி, விற்கப்படும் அல்லது நுகர்வு நடக்கும் இடத்தில் வரி செலுத்தப்படும்.

ஏற்கெனவே வரி விதிக்கப்படாமல் இருந்த சில பொருட்களுக்கு வரிவிதிப்பு என்று வரும்போது விலையேற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வணிகர்களும், தொழில் முனைவோரும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக செயல்பட பல நாட்கள், மாதங்கள் பிடிக்கும். இதனை கொள்கை வகுப்பாளர்களும், அதிகாரிகள் மட்டத்திலும் உணர்ந்துகொள்ள இன்னும் கால அவகாசம் எடுத்துக்கொண்டு உற்பத்தியாளர், விற்பனையாளர், வாடிக்கையாளர் என அனைவரும் பயன்பெறும் வண்ணம் நடைமுறைப்படுத்தும்போது இந்த  ஜி.எஸ்.டி.  திட்டம் ஒரு அற்புதமான திட்டமாக உருவாகும் என்பதில் ஐயமில்லை. அதை விடுத்து பண மதிப்பு இழப்பு நடவடிக்கை திட்டத்தைப்போல இந்த திட்டம் நடைமுறை சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டால் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். சரியாக நிறைவேற்றப்படும் போது இது தொலைநோக்கில் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

கோயம்புத்தூரைப் பொறுத்தவரை தொழில் வணிக நகரம் என்ற முறையில் பெரிய நிறுவனங்கள் தயாரான அளவு சிறு, குறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.யை எதிர்கொள்ளும் வகையில் தயாராகவில்லை என்றே தோன்றுகிறது. கோவை இந்திய தொழில் வர்த்தக சபை, கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் போன்றவை தங்கள் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களுக்கும், மற்றவர்களுக்கும்  ஜி.எஸ்.டி. குறித்த கருத்தரங்கங்கள், கூட்டங்களை நடத்தி வருகின்றன. அவை ஓரளவு நடைமுறைச் சிக்கல்களை தீர்க்க உதவும்.

இந்த மாற்றங்களை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு செயல்படுவது உடனடியாக சாத்தியமா என்று தெரியவில்லை. என்றாலும் மாற்றங்களே வாழ்க்கை. அதை எதிர்கொள்வதுதான் விவேகம்.

ஏனெனில் பல வளர்ந்த நாடுகளில் இந்த திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நல்லதொரு திட்டத்தை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவோம். விண்வெளிக்கு சாட்டிலைட் அனுப்பி வெற்றிகண்டு, உலக அரங்கில் பெருமை பெற்றதுபோல இதிலும் வெற்றி காண்போம்!

 

இவர்கள் பார்வையில்:

வனிதா மோகன்,

(தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை),

ஜிஎஸ்டி 12% உயர்த்தியது சில மக்களைப¢ பாதிப்படைய செய்யும். சிலருக்கு இதனால் பல நன்மைகள் ஏற்படும்.

 

டி.சீனிவாசன்,

(கோவை மாவட்ட ஹோட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கத் தலைவர்),

2% இருந்து 12% ஜிஎஸ்டி உயர்ந்து உள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள். இதை கண்டிக்கும் விதத்தில் மே 30 வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம்.

 

நந்தகோபால்,

(இயக்குனர், பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரி, கோவை)

பல நாட்களாக காத்துக்கொண்டு இருந்த விஷயம். மத்த நாடுகளில் கொண்டு வந்தபொழுதே நம் நாட்டிலும் அமல் செய்திருக்க வேண்டும். இப்பொழுது ஜிஎஸ்டி 12% ஆக்கியது வரவேற்க வேண்டிய விஷயம்.

 

இயகோகா சுப்ரமணியம்,

(முன்னாள் துணைத்தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை),

இந்தியாவில் ஜிஎஸ்டி முறை அறிமுகம் செய்தது வரவேற்கக்கூடிய விஷய மாகும். கருப்புப்பணம் ஒழிப்புத் திட்டம் போல, நடைமுறை வாழ்க்கையில் இதைப் பழகிக்கொள்ள சில நாட்கள் எடுத்துக் கொள்ளும். அனைத்து பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி சரியான வரியையே விதித்துள்ளது. பெட்ரோல் மீது செலுத்தப்பட்டுள்ள வரியை மட்டும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக  நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

– ஆசிரியர் குழு.