காட்டு யானை சின்னத்தம்பிக்கு ரசிகர் மன்றம் துவக்கம் !

கோவையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பிடிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், இந்த யானைகளை பிடிக்க கூடாது என பொதுமக்கள் சிலர் எதிர்த்து வரும் நிலையில் , அந்த காட்டு யானைக்காக ரசிகர் மன்றத்தை துவக்கி உள்ளனர்.கோவையில் வரப்பாளையம், பன்னிமடை, பெரிய தடாகம், சின்னதடாகம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக காட்டு யானை விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை தக்காளி, சோளம், கரும்பு, வாழை  , தென்னை உள்ளிட்ட பல பயிர்கள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கபடுகின்றனர். இந்த யானையை அடர்ந்த வன பகுதிக்கு அனுப்ப முயன்றும் பலனளிக்கவில்லை. இதனால் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்காக சாடிவயலில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு விரட்டும் முயற்சி நடக்கிறது.

இந்நிலையில் இந்த யானையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தாலும், மறு புறம் இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காட்டு யானைகளுக்கு சின்னத்தம்பி , விநாயகன் என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். ஏற்கெனவே,  வனம் எங்களின் வாழ்விடம்! எங்களையும் வாழவிடுங்கள் ! என்று அந்தப் பகுதிகளில் காட்டு யானைகளுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தவிர #SaveChinnathambi #SaveVinayagan  போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.  இந்த சூழலில் தற்போது சின்னதடாகம், சின்னத்தம்பி ரசிகர் மன்றம்  என்ற பெயரில் அந்தப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது , காட்டு யானைகளுக்கான  ஆதரவு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.