விரைவில் வீடுகளுக்கு பைப் லைன் மூலமாக கேஸ்!

கோவை தனியார் ஹோட்டல் அரங்கில்  இந்தியன் ஆயில் நிறுவனத்தின்  தமிழ்நாடு  – பாண்டிச்சேரி  சில்லரை வர்த்தக பிரிவின் முதன்மை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2017 -18 ஆண்டில் 200 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் வர்த்தகம் நடைபெற்று இருப்பதாகவும்  , இதில் 50 சதவீதம் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கோவையில் மட்டும் 24 லட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும், 11 லட்சம் இணைப்புகள் சமையல் கேஸ் இணைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இயற்கை எரிவாயுவினை  பெட்ரோல் நிலையங்களில் மையங்கள் அமைத்து வாகனங்களுக்கும், பைப் அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்த அவர், இதற்காக நடைபெற்ற டெண்டர்களில் கோவை  மற்றும் சேலம் பகுதிகளில் குழாய் மூலம் எரிவாயு அமைக்கும் டெண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த டெண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் எடுத்தற்கான விழா வரும் 22ம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற இருப்பதாகவும் பிரதமர் மோடி வீடியோ கான்பிரசன்ஸிங் முறையில் இதில் கலந்து கொள்வதாகவும் அவர்  தெரிவித்தார்.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவதும் அதை மற்ற இடத்திற்கு எடுத்து செல்வதும் எளிது என தெரிவித்த அவர், தமிழகத்திற்கு  எரிவாயுவை அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவது  புதிதாக இருந்தாலும் மற்ற மாநிலங்களில்  இந்த நடை முறை இருப்பதாகவும் ,வீடுகள் ,பெட்ரோல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் உள்ள 11 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை அடுத்த 8 வருடத்தில் பைப் மூலம் இணைப்புகள் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். புதிதாக பைப்லைன் போடுவதற்கு மட்டுமே எதிர்ப்புகள் இருக்கும் எனவும் ஆனால் ஏற்கனவே இருக்கும் பைப்லைன்களின் அருகிலேயே புதிய பைல்லைன்கள் அமைத்து எரிவாயுவை கொண்டு வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.கோவையில்  273 பெட்ரோல் பங்குகளும் சேலத்தில் 158  பெட்ரோல் பங்குகளும் எரிவாயு லைன் கொடுக்க இருப்பதாகவும் முதுநிலை மேலாளர் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.