தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் கோவை ஹரிஹர சுதன் நியமனம்!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக கோவையை சேர்த்த ஹரிஹர சுதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“வருகின்ற நவம்பர் மாதம் 30-ம்  தேதி தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவேந்த ரெட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தெலுங்கானா மாநில பொறுப்பாளர் மாணிக்ரவு தாக்கரே ஆகியோர் ஒப்புதலுடன் என்னை தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது. தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமனம் செய்ய பரிந்துரை செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், செகந்திராபாத் நாடாளுமன்ற பொறுப்பாளர் ரூபி மனோகரன் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஹரிஹர சுதன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஊடகத்துறையின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.