திமுக தான் எங்களுடைய எதிரி எடப்பாடியார் கருத்தே.. எங்களுடைய கருத்து

கோவை இதய தெய்வம் மாளிகையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அதிமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி, அவைத்தலைவர் சிங்கை முத்து, பொருளாளர் பார்த்திபன், துணை செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கோவையில் அமைக்கப்படவுள்ள பூத் கமிட்டி, மகளிரணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குறித்து தீர்மானிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, ‘எடப்பாடி பழனிசாமி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்ததால் அவருக்கு மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் புரட்சித்தமிழர் பட்டம் கொடுக்கப்பட்டது. தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக கோவையில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. உதயநிதி ஸ்டாலின் உழைக்காமல் கட்சிப் பதவியில் பொறுப்பேற்று இப்போது பெரிய தலைவராக மாறியுள்ளார். திமுக தான் எங்களுடைய எதிரி.
தமிழகத்தில் பக்குவமாக செயல்படும் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்.

அவர் எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்படுகிறார். கூட்டணி குறித்து அவர் எடுக்கும் முடிவுதான் ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவு. அவரின் கருத்துதான் எங்களுடைய கருத்தும். தேர்தலில் அதிமுகவினர் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் செயல்பட வேண்டும்’ என்றார்.

அண்ணாவைக் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு, ‘பெரியாருக்கு அடுத்து தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு அண்ணாதான் தீர்வுகளைக் கொண்டு வந்தார். அவரைப பற்றி பேச யாருக்கும் தகுதியில்லை. எங்களுக்கு எதிரி திமுகதான் என்றாலும் கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுத்தர மாட்டோம்’ என்றார்.