தமிழக அரசின் மனு நிராகரிப்பு!

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்டு இருக்கும் புதிய விதிகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுக்க வரும் நவம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பட்டாசை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து இருந்தனர்.

இதில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்தது. தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று விசாரிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் பா.வினோத் கன்னா வாதிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கு விசாரித்தது. இந்த பட்டாசு கட்டுப்பாட்டு விதிக்கு எதிராக சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இதில் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு இதில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி. இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம்.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் வேண்டுமென்றால் அந்த நேரத்தை மாநில அரசு தீர்மானிக்கலாம். தமிழகத்திற்கு ஏற்ற 2 மணி நேரத்தை அரசே தீர்மானிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.