சிக்கனப்படுத்தி வருகிறீர்களா! தேசிய சிக்கன நாள் இன்று!

சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924ல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் ‘உலக சிக்கன தினம்” என ஒரு தினம் கொண்டாப்பட வேண்டும் எனவும், இத்தினத்தில் சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும், சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.

இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு விளக்குகின்றார். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”  அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது. பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே, இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார். “செய்க பொருளை” என்று .

 

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றனர் ஆன்றோர். இந்தக் கூத்து பொருள் தேடுவதற்காக அவசியத்தை உணர்த்துகின்றது. இருப்பினும் சிலர் கூறுவார்கள் “சம்பாதிக்கிறேன் ஆனால் வரும் வருவாயோ மிகக் குறைவு. வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை.” இதற்கு வள்ளுவர் பின்வருமாறு பதில் கூறுகிறார்.”ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை. போகாறு அகலாக் கடை” (குறள் 478). வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. செலவு சிறிதாக இருக்கும் வரை கேடு இல்லை. அதாவது வருவாய்க்குள் செலவு செய்பவனுக்குத் தீங்கு இல்லை, கவலைகள் இல்லை. எனவே மேற்படி கருத்துகளில் இருந்து சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் சிறுகச் சிறுக சேமிப்பது நடைமுறையிலுள்ள பழக்கமாகும். பிடியரிசி எமது தாய்மாரிடையே பண்டைக் கால முதல் இருந்துவந்த பழக்கமாகும். இந்தப் பழக்கம் சிக்கனத்தையும், அதே நேரம் சேமிப்பையும் வழியுருத்தி நிற்கின்றது.

தாமஸ் ஆல்வா எடிசன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராவார். பல விஞ்ஞான சாதனங்களைக் உலகுக்குத் தந்தவர். அவர் தனது சக்திகளை ஒரு முனைப்படுத்தியதோடு, பணத்தை சேமிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தார். இந்த சேமிப்பு மட்டும் இல்லாதிருந்தால் அவர் வெளியுலகத்திற்குத் தெரியப்படாமலேயே இருந்திருப்பார் என தற்போதைய சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், சேமித்த பணமே அவரின் சாதனைகளை உலகம் அறியச் செய்தது. அவரைப் புகழேணிக்கு ஏற்றியது. ஆல்வா எடிசனின் இந்த அனுபவம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும்.

‘சிக்கனம் என்பதை முதலில் வைத்திருக்கிறேன். சிந்தனையை அதற்கு அடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே, இந்த முறையிலே அந்தச் சிக்கனம், சிந்தனை, சிறந்த பண்பு, சீர்த்திருத்தமுடன் வாழ்வு, துணிவு இவை வேண்டும்.

அப்படி வேண்டுமானால் குடும்பத்தில் ஒருவர் மட்டும் சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் என்று இருந்தால் போதுமா? போதாது. இதை உணர்ந்து ஒத்துக் கொள்ளக் கூடிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்திலே அமைதி இருக்கும், சீர்திருத்தம் பரவ முடியும், சிக்கனம் நிலைக்க முடியும், நலம் பெற முடியும். எனவே, அந்த முறையிலே சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் இவை எல்லாம் குடும்பத்தில் நிலவ வேண்டுமானால்இ அந்தச் சிந்தனையாற்றல் பெருகுவதற்கு மனவளம் தான் வேண்டும்”, என்று ஒரு முறை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கருத்தாகும். தனிப்பட்ட நபராகவன்றி குடும்பமாக வாழ்பவர்கள் அதிகம் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.  சிறு வயதிலே சிறார்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தனிப்பட்ட சேமிப்பினையும், சிக்கனத்தையும் புகட்டக்கூடிய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில் மாணவர்களின் பாடப்பரப்புகளினூடாகவும் தேசிய பொருளாதார நெருக்கடிகள் அந்த நெருக்கடிகள் சேமிப்பினதும், சிக்கனத்தினதும் முக்கியத்துவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே, நவீன இக்காலகட்டத்தில் சிக்கனம், சேமிப்பு எனும் வார்த்தைப் பதங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை அலகில் அல்லாமல் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கின்றோம்.

இந்த சிக்கன நிலைப்பாடுகளை உலக சிக்கன தினமான இத்தினத்தில் கருத்திற் கொள்வோமாக!