பொறுத்தார்; பூமி ஆள்வாரா?

ஊருக்கு ஒரு கட்சி, தெருவுக்கு ஒரு சங்கம், அதற்கென தலைவர்கள், செயலர்கள் என்று ஏராளமானோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் பெரியளவில் இல்லை, பெயரளவில் மட்டுமே செயல்படுகிறார்கள். ஆக, ஊரறிந்த, நாடறிந்த ஓர் அரசியல் தலைவர் தற்போது இங்கே இல்லை. அதுமட்டுமா? ஆளுநர், மேயர், கவுன்சிலர் என முக்கியமான தலைமைப் பொறுப்புகள் காலியாகவே உள்ளன. சிலபல கட்சித் தலைவர்கள் இருந்தாலும் எட்டுக் கோடி தமிழக மக்களிடம் அவர்களுக்கு செ(£)ல்லும்படியான செல்வாக்கு இல்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களுக்கு இரத்தினக் கம்பள வரவேற்பு எப்போதும் உண்டு. அதனாலேயே தற்போதும் அரசியல் கட்சித் தலைவர்கள் திரை நட்சத்திரங்களைத் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர். ரஜினி தமிழ்நாட்டிற்கு நடிக்கவே வந்தார். அதை அவரும் உணர்ந்திருந்தார். இங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடிக்க, ‘மெய்யோ, பொய்யோ உருக்கமாக, நன்றாக, அழகாக, தெளிவாகப் பேசினால் போதும். யார் வேண்டுமானாலும் இங்கே தலைவர் ஆகலாம்’. முடிவாக, மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும். அப்படி பிடித்துவிட்டால் அவரே வேண்டாம் என்றாலும் மக்கள் விடமாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் ரஜினியின் நடிப்பும், ஸ்டைலும், வசன உச்சரிப்பும் தமிழ் மக்களை ‘தலைவா…’ என்று அழைக்க வைத்துவிட்டது.
21 வருடத்திற்கு முன் ஏற்பட்ட ஓர் அரசியல் சூழ்நிலையில், அவர் ஒரு கட்சிக்கு ஆதரவும் மறு கட்சிக்கு எதிர்ப்பும் தெரிவித்தார். அதற்கு கிடைத்த வரவேற்பை அவரே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அச்சம்பவத்தையடுத்து அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் வலுத்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ரஜினியை ரசிகர்களும் அரசியல் ஆதாயம் தேடுவோடும் நிர்பந்தித்தனர். ஊடகங்களும் தங்களது பங்கிற்கு ‘அவர் இப்போது வருவாரா? நாளை வருவாரா?’ என்ற தலைப்பில் ஊடாட ஆரம்பித்தன. மேலும் சில திரைப்பட இயக்குநர்களும் ரஜினியின் சம்மதத்தோடு தங்களது படங்களில் இக்கருத்தை வசனங்களாக்கி சம்பாதித்தனர். ஆனால் இதற்கு ‘குசேலன்’ படத்தில் நடிகனாகவே பதில் அளித்தார் ரஜினி. ஆனால் அதை செவி கொடுத்து கேட்டவர் யாரும் இல்லை.
அவரைத் திட்டி தங்களது கட்சியைப் பிரபலப்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள்; ரஜினிக்குப் பின்னால் நடிக்க வந்தவர்களின் அரசியல் பிரவேசம் ஆகியன ரஜினி ரசிகர்களுக்குத் தாங்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், ரசிகர்கள் சிலர் தங்களுக்கு வாய்ப்பளித்த அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் தனிக்கொடியோடு அரசியலில் இறங்கினர். சிலர் வெவ்வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்களின் வேட்கைக்கு ரஜினியின் தற்போதைய பதில், ‘ருசி கண்ட பூனையைப் போல், காசு பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களை என் அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன்’ என்பதுதான்.
ஆக, இதிலிருந்து அவர், தன்னைச்சுற்றி நடப்பவற்றை மிகத் தெளிவாக கவனித்துக்கொண்டுதான் உள்ளார் என்பது விளங்குகிறது. ஆனால் அரசியல் பிரவேசம் குறித்து அவர் மிகவும் ஆழமாக யோசிக்கிறார். இன்றுவரை அதுகுறித்து உறுதியான வார்த்தை கூறவில்லை. ஆனால் ‘ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் உண்மையாக இருப்பேன்’ என்கிறார்.
‘அவர் நாட்டுக்கு நிறைய நல்லது செய்வார். நல்ல மனிதர். மிகவும் வெளிப்படையான நபர்’ என்றெல்லாம் அவரது ரசிகர்கள் அல்லாதவர்களும் பொதுவாக பேசுகின்றனர். ஆயினும் சிலர், ‘அவருக்கு அரசியல் தெரியாது. நடிகர்கள் அரசியலுக்கு வரத் தேவையில்லை. அவர் தமிழ்நாட்டுக்கு இதுவரை என்ன செய்தார்? இனிமேல் அரசியலுக்கு வந்து என்ன செய்துவிடப் போகிறார்?’ என்று எதிர்கருத்தும் வீசுகின்றனர்.
எதிராக பேசுபவர்கள், ஆதரவாக பேசுபவர்கள் அனைவரையும் ஒன்றாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. ஏனெனில் இவர்கள் எவரும் தேர்தல் களம் என்று வரும்போது ‘தங்களை ஆளப் போகும் தலைவர் யார்? நமது தெருவின் வார்டு கவுன்சிலர் யார்? அவரது தகுதி என்ன? எதிர்பார்ப்பு என்ன? நமது தேவை என்ன? நம்மூர் எம்எல்ஏ யார்? எம்.பி. யார்? அவர் நல்லவரா? கெட்டவரா?’ என்றெல்லாம் பார்ப்பது இல்லை. மாறாக, கட்சித் தலைவர் என்ற ஒற்றை நபரை நம்பியும்; ஒருநாள் கூத்து இது, இந்த நாளில் நமக்குக் கிடைக்கும் இலவசங்கள் என்ன? என்றுதான் கணக்குப் போட்டு வாக்களித்து வாழ்கிறார்கள் பலர்.
தேர்தல் முடிந்தால், அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுகின்றனர். வேண்டுமானால், அவர்களில் சிலர் குட்டிச்சுவரிலும், தற்போது ‘வாட்ஸ்அப்’பிலும், டீக்கடையிலும் விவாதித்துக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் தலைவர்களாக முன்வர மாட்டார்கள், இவர்களில் ஒருவரை அதாவது, தங்கள் ஊரிலேயே சுயேச்சையாக நிற்கும் ஒருவரை தலைவராக்கவும் தயங்குவார்கள்.
ரஜினி எனும் நடிகர், தங்கள் தெருவின் கவுன்சிலரோ, எம்.எல்.ஏ.வோ, எம்.பி.யோ அல்ல என்பதை மறந்துவிட்டு, ஓர் அரசு அலுவலரிடம், அரசியல்வாதியிடம் கேட்க வேண்டிய கேள்வியை அவரைப் பார்த்துக் கேட்கின்றனர். காரணம், அவருக்கு அரசியல் ஆசை இருக்கிறதே என்று ஏசுகின்றனர். ஆனால் இதுபோன்ற ஆவேசமான கேள்விகளுக்கு ரஜினி எப்போதும் பதில் சொன்னதுமில்லை. கோபப்பட்டதும் இல்லை. அவரது பதில் வெறும் மௌனமே. இது அவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது-. மோடி முதற்கொண்டு யார் அழைத்தாலும் அவசரப்படாத பொறுமையான குணம் அவரது பக்குவத்தைக் காட்டுகிறது.
அரசியலில் நுழைவதும், சராசரி வெற்றியைவிட அதிக வாக்குகளைப் பெறுவதும் அவருக்கு சுலபம்தான். ஆனால் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் இன்றும் ‘நன்றிக்கடனுக்காக’ மறைந்த பல மூத்தத் தலைவர்கள், ஊரில் இல்லாத தலைவர்களுக்கு ஓட்டுப்போடும் பழக்கம் உடையவர்கள். தலைமுறை, தலைமுறையாக இருகட்சிகளுக்கு மட்டுமே வாக்களித்த வழக்கமுள்ளவர்கள். இவர்களை நம்பி களத்தில் இறங்கினால் கட்டுமரமாகி கரைசேர்வாரா? இல்லை, இமயமலைக்குச் செல்ல நேரிடுமா? என்பதையும் அவர் தீர்மானித்திருப்பார் என்பது அவரது பேச்சில் தெரிகிறது.
ஏனெனில் மக்களின் மனநிலை வெகுவாக மாறிவிட்டது. இதைத்தான் அவர் ‘சிஸ்டத்தையே’ மாற்ற வேண்டும் என்கிறார். இது நடக்குமா? மக்களால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்களா? அரசியல்வாதிகள் மக்களை மாற்றி விட்டார்களா? என்று வாதாடும் அளவுக்கு நாட்டில் எங்கும் ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது. கமல் அண்மையில் ஒரு பேட்டியில், ‘மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள்’ என்பதற்கேற்ப, ஒரு ஆறு, கூவம் ஆவதையோ, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தோ, மரம் வெட்டப்படுவது குறித்தோ, குடிப்பதை நிறுத்துவது குறித்தோ யாதொரு கவலையும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையைக் குறித்து மட்டும் கவலைப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கும் மக்களிடம், ‘உங்கள் குடும்பத்தை முதலில் கவனியுங்கள். கெட்ட பழக்கங்களை விட்டுவிடுங்கள்’ என்பவர் அரசியலுக்கு வந்தால் எடுபடுவாரா?!
‘நான் பச்சைத் தமிழன்’ என்று தற்போது தெளிவாக சொல்லிவிட்டார். இதுவரை அவர் பொறுத்திருந்தது, எனது கணிப்புப்படி, ‘ஜெயலலிதா, கருணாநிதி காலத்திற்குப் பிறகே தனது அரசியல் பிரவேசம் இருக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்க வேண்டும். இப்போது இரு தலைவர்களில் ஒருவர் உயிரோடில்லை, மற்றொருவர் உடல்நலக் குறைவால் நடமாட முடியாமல் உள்ளார்.
இதுதான் சரியான தருணம் என்று அவர் முடிவெடுத்துவிட்டார். இருப்பினும், ரஜினி அரசியலுக்கு வந்தால் பல அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் எதிரியாக வேண்டிய சூழல் வரலாம். பல தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதற்கும் முடிவு சொல்ல வேண்டும். ஆனால் அவரோ, தனது நண்பர் ஸ்டாலின், போராளி சீமான், படித்தவர் அன்புமணி ராமதாஸ் என்று அனைவரையும் அரவணைத்து நல்லதொரு அரசியல் நாகரிகம் பேசுகிறார். இதுவெல்லாம் தற்போதைய அரசியலுக்கு சரிப்படுமா?
இருப்பினும், மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைய சமுதாயத் தினருக்கும்; ஊழல் அரசியல்வாதிகளால் நொந்துபோன சராசரி மக்களுக்கும்; பிரபலமான தலைவர்கள் இல்லாத தமிழகத்திற்கும் ரஜினி எனும் தலைமை தற்போது ‘ஆளில்லாத ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை’ என்பதைப்போலத்தான். இந்த வாய்ப்பு, ரஜினியைப் பொறுத்தவரை அவருக்குக் கிடைத்த ஓர் வரப்பிரசாதம். பொறுத்தது போதும், போர்க்களத்திற்கு தயாராகுங்கள் என்று ரசிகர்களைச் சொன்னவர், இனி நடக்கப் போகும் தமிழக அரசியல் சூறாவளியில் தனது கொடியை பறக்கவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
– கா.அருள்.