மறுசீராய்வு மனுக்கள் நவம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனுக்கள் அனைத்தும் நவம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்குக் கடந்த மாதம் 28-ம்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து, கேரளாவில் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன. 10வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கமுடியாது என்று தொடர்ந்து போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாயர் சர்வீஸ் சொசைட்டி, ஐயப்ப சேவா சங்கம், பிரமாணர் சங்கம், ஐயப்பா சேவா சமாஜம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த மனுக்களை தாக்கல் செய்தன. இவற்றை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதுபற்றி இன்று முடிவு செய்வதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே கவுல் அடங்கிய அமர்வு முன்பு, மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான மாத்யூ நெடும்பரா மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரினார். அப்போது நீதிபதிகள், மொத்தம் 19 மனுக்களையும் எப்போது விசாரிப்பது என்பது குறித்து நாளை முடிவு செய்வதாக கூறினர்.

இதன்படி இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் வரும் நவம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.