தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றே மேயருக்கு தெரியவில்லை அதிமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் திங்கட்கிழமை மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு வந்த அதிமுக உறுப்பினர்கள் பிரபாகரன், சர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி கவுன்சிலர்களின் அனுமதி பெறாமல் 170 கோடி ரூபாய்  பணத்தை கையாள்வதற்கான அனுமதியை தனியாருக்கு மேயர் கல்பனா அளித்து இருப்பதாக குற்றம் சாட்டினர்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கையில் பதாகையுடன் மன்ற அரங்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் குப்பை எடுப்பதற்கு தனியாருக்கு டெண்டர் விடுவது தொடர்பாக அனுமதி கோரப்பட்ட போது, இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது. இச்சூழலில் இந்த மாதம் மீண்டும் இந்த பொருள் சபைக்கு வருகிறது எனவும், இந்த டெண்டர், கூட்டத்தின் அனுமதி பெறாமல் 170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டுள்ளது எனவும் கூறியதுடன், மேயர் தனக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என்றே தெரியாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

அவசர கோலத்தில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசியலுக்காக நாங்கள் இதனை பேசவில்லை இந்த விவகாரத்தில் எத்தனை கோடி கைமாறியது என தெரியவில்லை எனவும் கூறினர்.

இதேபோல் இது தொடர்பாக கண்டிப்பாக விசாரணை தேவை எனவும், கோவை மாநகராட்சியின் மேயர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத் துறையும் அமலாக்கத்துறையும் விரைவில் சோதனைக்கு போகும் எனவும் தெரிவித்தனர். கூட்டம் துவங்கும் முன்பாகவே அதிமுக கவுன்சிலர்களின் போராட்டம் காரணமாக மாமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.