ஆண்டவன் சொல்லிவிட்டாரா?

தமிழக அரசியலில் இன்று ஒரு வினோதமான சூழல் நிலவுகிறது. ஆம். தமிழக அரசியல் தலைமையைப் பொறுத்த வரை ஒரு வெற்றிடம் காணப்படுகிறது. தொடர்ந்து பல பெரிய ஆளுமைகளைத் தலைவர்களாகப் பார்த்து வந்த தமிழ்நாட்டில் இன்று ஒரு வெறுமை தெரிகிறது. சுதந்திரப் போராட்ட காலம் தொடங்கி, சென்ற ஆண்டு வரை இராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்றிருந்த தலைவர்கள் பலர் இருந்தனர்.
மக்களை பாதிக்கும் எந்த ஒரு பிரச்னைக்கும் இவர்கள் குரல் கொடுப்பார்கள், அரசியல் ரீதியாக முடிவு காண்பார்கள் என்ற தீர்க்கமான எண்ணம் தமிழக மக்களிடையே பலமாக வேரூன்றியிருந்தது. ஏனெனில், அந்த தலைவர்கள் மீது மக்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவர்களும் அதைப் பொய்யாக்கும் விதத்தில் எப்போதும் நடந்து கொண்டதில்லை.
பலவிதமான வேற்றுமைகள் இருந்தாலும் அவர்கள் மக்களிடம் இருந்து என்றும் விலகியதே இல்லை. அந்த தலைவர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் பதவியிலும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் மனங்களில் எப்போதும் தலைவர்களாகவே இருந்தனர்.
இன்று யார் கண்பட்டதோ என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சத்தோடு தலைமைப் பஞ்சமும் வந்து சேர்ந்து கொண்டு விட்டது. தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா திடீரென மறைந்து விட்டார். கலைஞர் கருணாநிதி தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. அவரின் மன வேகத்துக்கு உடல் நலம் ஈடு கொடுக்க முடியாமல் அவரை ஓய்வெடுக்க வைத்துவிட்டது.
இவர்களுடன் ஒப்புநோக்கக் கூடிய அளவுக்கு செல்வாக்கும், சொல்வாக்கும், ஆளுமையும் படைத்த தலைவர்கள் யாரும் தற்போது தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரத்தில் மக்களுக்கு நன்கு அறிமுகமான, ஏற்கெனவே மக்கள் ஏற்றுக்கொண்ட அரசியல் தலைவராக ஸ்டாலின் ஒருவரைக் கூறலாம். மற்றவர்கள் எல்லாம் மக்களின் பார்வையில் இருந்து வெகுதூரத்தில்தான் இருக்கிறார்கள் என்பது சற்று நெருடலான உண்மை.
அத்தோடு மற்றவர்கள் தமிழக மக்கள் மொத்தமான பேருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிமுகம் உள்ளவர்களாகவும் இல்லை.
செல்வி ஜெயலலிதாவுடன் ஒப்பிடும் போது அதிமுகவின் இப்போதைய தலைவர்களின் நிலையானது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு வட மாவட்டங்களில் உள்ள செல்வாக்கு, மற்ற பகுதிகளில் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. அதைப் போலவே திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஒரு குறிப்பிட்ட பிரிவின் தலைவர்களாக சித்தரிக்கப்படுவது அவர்களை தமிழக தலைமைக்கு ஒப்பிடுவதில் ஐயத்தை உருவாக்குகிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றில் ஆற்றல்மிக்க தலைவர்கள் பலர் இருந்தபோதும் தமிழகம் முழுவதும் அறிமுகம் பெற்றவர்களாக, அவர்களை மக்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மை கொண்டவர்களாக இருப்பதாக தெரியவில்லை.
வைகோ, சீமான் உள்ளிட்ட பிற அரசியல் கட்சித்தலைவர்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது. இத்தகைய பெரிய அரசியல் பின்புலம் இல்லாமல் மாற்று அரசியல் சக்தியாக உருவான நடிகர் விஜயகாந்த் சென்ற தேர்தலில் இருந்து முடங்கிக் கிடக்கிறார் அல்லது முடக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும்.
வெகுகாலமாக காங்கிஸ் & திமுக, திமுக & அதிமுக என்று இரு கட்சி அரசியல் மோதலைப் பார்த்து வந்த தமிழக மக்களுக்கு அதுபோன்ற ஆளுமைகளும், கட்சி செயல்பாடுகளும் இல்லாமல் இருப்பது ஒருவிதமான வெறுமையைத் தந்திருக்கிறது. அதேநேரம் இரு கட்சி மோதல், ‘அரசியல் போதும், மாற்று சக்திகளுக்கு ஆதரவு அளித்தால் என்ன?’ என்ற குரலும் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேரடியாக சந்தித்து மனம் திறந்து உரையாடி இருக்கிறார். அதனை மையமாக வைத்து பேசப்படும் கருத்துகளில் முக்கியமானது ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பதுதான். இந்த கேள்வியானது அவரின் ரசிகர்களின் மனதில் வெகுகாலமாக இருந்து வரும் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இந்த கேள்விக்கு ஒரு போதும் நேரடியாக பதில் சொன்னதில்லை. அதேபோல, இந்த அனுமானங்களை மறுக்கும் வகையில் நோ என்றும் எப்போதும் சொன்னதில்லை. தற்போதும் கூட அவர் அரசியலுக்கு வரவேண்டும் எனபதை ஆண்டவன்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற தொனியில்தான் அவரது பேச்சு அமைந்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாமா, கூடாதா, அவருக்கு அந்த தகுதி இருக்கிறதா என்ற கேள்விகளைத் தாண்டி அவர் அரசியலில் நுழைவதற்கேற்ற சூழல் இப்போது உருவாகி இருப்பதாக பலர் கருதுகிறார்கள்.
எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற ஒரு தகுதிக்கேற்ப திரைத்துறையைச் சேர்ந்த பிரபல நடிகரான அவர் தாராளமாக அரசியலுக்கு வரலாம். ஏற்கெனவே திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டுத்தான் வருகிறார்கள். பல்லாண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுடைய பிரபலத்தன்மைக்கு கொஞ்சமும் குறையாத மவுசு கொண்டவர் ரஜினிகாந்த் அவர்கள்.
அவர் நடிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இன்று வரை தமிழகத்தை தாய்வீடாக கொண்டவர். தனது ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்கம் தந்த தமிழகத்தை தனது பாட்டில் பாடியவர். அவ்வப்போது நடந்துவிட்ட சில சிறு சம்பவங்களைத் தவிர பெரிதாக எந்த சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். தமிழ்த்திரைப்பட உலகில் உள்ள அனைத்துப் பிரிவினரிடமும் நல்ல மதிப்பு பெற்றவர். தமிழ்த்திரையுலகைத் தாண்டி தெலுங்கு, கன்னட, இந்தி திரைப்படத் துறையினரிடமும் நட்பும் தொடர்பும் கொண்டவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களின் அன்பைப் பெற்ற அதே நேரம் பிரதமர் நரேந்திர மோடி போன்றவர்கள்கூட அவரின் இல்லம் தேடி வந்து பேசும் அளவு நெருக்கமும், இணக்கமும் கொண்டவர்.
இந்த நிலையில் தான் தமிழக அரசியலில் இந்த தலைமைக்கான வெற்றிடம் உருவாகியிருக்கிறது. அவரின் ரசிகர்களும் அவரது அரசியல் பிரவேசத்தை வெகுகாலமாக எதிர்பார்த்து வருகிறார்கள். ரஜினி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? நடிகர் விஜயகாந்துக்கு இருந்த துணிவு ரஜினிக்கு கிடையாதா? சென்ற தேர்தலில் விஜயகாந்த் கட்சி பெற்ற தோல்வி அவருக்கு ஒரு பின்னடைவைத் தந்திருப்பதை தவிர அவரும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவராகத்தானே இன்றும் இருக்கிறார்? அப்படி இருக்கும்போது ரஜினியால் முடியாதா என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது. இது ரஜினிக்கும் தெரியும். என்றாலும் ஏன் ஒரு வெளிப்படையான பதிலைச் சொல்லாமல் தவிர்த்து வருகிறார்? இது ஒரு யுக்தியாகவே இருந்தாலும்கூட நீண்ட நாட்களுக்கு ஒரே முகமூடியை மாட்டிக் கொண்டிருக்க முடியாது.
ரஜினிக்கு அனைத்து அரசியல் கட்சிகளிலும் நண்பர்கள் உண்டு. ஆலோசகர்கள் உண்டு. அபூர்வ ராகங்கள் படம் தொடங்கி கபாலி வரை திரைப்பயணம் வந்தாயிற்று. அவரது அரசியல் பயணம் எப்போது தொடங்கப் போகிறது என்று அறிந்துகொள்ள பலரும் ஆவலாக இருக்கிறார்கள். ஒரு வலுவான தலைமை, பல சிக்கல்களைத் தீர்க்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அந்த தலைமைப்பண்புகள் கொண்டவர்தான் ரஜினி என்று அவரின் ரசிகர்கள் மனதார நம்புகிறார்கள்.
தலைவா வா, த¬லைமையேற்க வா என அழைக்கிறார்கள். அதற்கான சூழல் தமிழகத்தில் தற்போது உருவாகி இருப்பதாகவும் கருதுகிறார்கள்.
என்றாலும் ரஜினியின் மௌனம் கலையுமா, அவர் அரசியலுக்கு வருவாரா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி தான்.
ஆனால் கடந்த ஐந்து நாட்களாக ரசிகர்களை சந்தித்து பேசியதை பார்த்தால் ஆண்டவன் சொல்லி விட்டாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இவர்கள் பார்வையில்:
மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ்.
நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வந்தால் தப்பில்லை. அரசியல் என்பது ஒரு நிர்வாகம் தான் நல்ல அரசியல் வாதிக்கு மக்கள் எப்பொழுதும் மதிப்பளிப்பார்கள். கெட்டவர்கள் தானாக விலகி விடுவார்கள். ரஜினி அரசியலுக்கு வரவிருப்பது எப்படி காங்கிரஸ் வரவேற்றதோ அதே போல் நானும் வரவேற்கிறேன். பட்டும் படாமல் இல்லாமல் ரஜினி அவர்கள் முழுமையாக அரசியலுக்குள் வர வேண்டும். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.

டைரக்டர் பிரபு குமார்,
(பொள்ளாச்சி நகரத் தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற தலைவர்).
ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். போருக்கு தயாராகுங்கள் என்று அவர் கூறியது, அரசியலுக்கு வருவார் என்பதை உறுதி செய்கிறது. புதிதாக கட்சி ஆரம்பித்து தனிவளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சய மாக மாற்றங்கள் ஏற்படும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமும் கூட. கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார்.

வேல்முருகன்
(ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற உறுப்பினர், கோவை)
சினிமாவில் 40 வருடங்களாக பணியாற்றி வெற்றி பெற்றவர். ரஜினிகாந்த் கடந்த ஐந்து நாட்களாக நடத்திய ரசிகர்கள் சந்திப்பில் தெரிந்திருக்கும் அவருடைய ஆளுமை திறன். ரஜினிக்கு பணத்தின் மேல் ஆசை இல்லை. ஏனென்றால் தனது நடிப்பின் மூலம் சினிமா துறையில் சம்பாதித்துவிட்டார். கண்டிப்பாக அவர் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தான் அரசியலுக்கு வருகிறார். எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தனித்து நின்று சாதிப்பார். இன்றைய சூழ்நிலையில் அவர் அரசியலுக்கு தேவை.
– ஆசிரியர் குழு.