வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் அதிக வருமானம் ஈட்டி சாதனை

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தி நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர் . இந்த விவசாயிகள் தென்னை, பாக்கு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட விவசாய பொருட்களை உற்பத்தி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். இதில் இடைத்தரகர்கள் நீங்கி , விற்பனையான விளைபொருட்களுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக உடனுடக்குடன் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அந்த நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் , இந்த உற்பத்தி நிறுவனத்தின் மூலமாக இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.7.91கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்து உள்ளதாக தெரிவித்தனர். இந்த வேளாண் நிறுவனத்தின் மூலமாக, விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது, மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை விவசாயிகள் மத்தியில் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை ஈஷா அறக்கட்டளை மூலம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் சந்தை நிலவரப்படி விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் விற்பனை செய்வது போன்ற வழிமுறைகளை அளிப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் இந்த நிறுவனம் தமிழகத்தில் சிறந்த உழவன் உற்பத்தி நிறுவனமாக உள்ளதாகவும் கூறினர். நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்