உலகச்  சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியில் சேரன் கல்விக் குழுமம்!

உலகச்  சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு சேரன் கல்வி குழுமம், கோவை வனத்துறையுடன் இணைந்து 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியைத் திங்கட்கிழமை தொடங்கியது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், சேரன் செவிலியர் கல்லூரி முதல்வர் மீனாகுமாரி, செந்தில் குமார் உதவி வன பாதுகாவலர், பிரியா வன வரம்பு அதிகாரி ஆகியோர் தலைமை தாங்கினர்.

சேரன் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான எஸ்.எம்.எஸ் கலைக் கல்லூரி மைதானம் மற்றும் விடுதியில் 1000  மரக் கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்துப் பேசிய கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், “உலக வெப்ப மயமாதலைத் தடுக்கச் சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும். இதற்கு, மாணவர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது. இதைக் கருத்தில் கொண்டு சேரன் கல்விக் குழுமம் 1 லட்சம் மரம் நடும் பணியைத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அவரைத் தொடர்ந்து சேரன் செவிலியர் கல்லூரி முதல்வர் மீனாகுமாரி பேசுகையில், “வனத்தின் ஆரோக்கியமே நாட்டின் செல்வம், அதனைக் கருத்தில் கொண்டு 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியில் கோவை வனத்துறையுடன் இணைந்து சேரன் கல்வி குழுமம் செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி. காடுகளைப் பாதுகாக்க இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும். கோவை வனத்துறையுடன் இணைந்து எங்கள் கல்லூரி மாணவர்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்களிப்பார்கள்” எனக் கூறினார்.

முடிவில், “சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எனது அன்றாட வாழ்வில் சாத்தியமான அனைத்து மாற்றங்களையும் செய்ய நான் உறுதியளிக்கிறேன். சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிறரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தவும் நான் உறுதியளிக்கிறேன்’ என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.