1100க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

கோவை, நீலாம்பூரில் செயல்பட்டு வரும் ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சிறப்பான மருத்துவ வசதிகளை தொடர்ந்து வழங்குவதற்காக 11 லட்சம் சதுர அடியில் 1100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் விரிவாக்கம் (ஃபேஸ்-2) செய்யப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழா ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து டாக்டர் மாதேஸ்வரன் கூறியதாவது, “விரிவுபடுத்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தில் தோல் வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கி, மூளை புனரமைப்பு மையம், முதுகுத்தண்டுவடம் புனரமைப்பு மையம், விஷ முறிவு தீவிர சிகிச்சை பிரிவு, தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு, உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவு, செயற்கை கருத்தரிப்பு மையம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ வசதிகள் இடம்பெறுகின்றன. மேலும் எம்.ஆர்.ஜி.எப்.யு.எஸ். எனும் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் பார்க்கின்சன்ஸ் நோய்க்கு கத்தியற்ற மூளை அறுவை சிகிச்சை எங்களது மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது” என்றார்.