பலன் கொடுக்குமா…? வெளிநாட்டு சுற்றுப்பயணம்!

ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாநில அரசால் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். வரும் 2024ம் ஆண்டு ஜனவரி  10, 11 ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் இந்த மாநாடு சென்னையில் நடத்தப்பட இருக்கிறது. தமிழக அரசு இதற்கான ஆயத்த பணிகளில் இப்போதே ஈடுபட தொடங்கி உள்ளது.

சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 23 ஆம் தேதி முதல் 9 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்ற  முதல்வர் ஸ்டாலின், இரு  நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் 2024ம் ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு நேரில் வருமாறு அழைப்பு விடுத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூரை சேர்ந்த முக்கிய தொழில் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தானது. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் நடத்திய நிகழ்வுகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 25ம் தேதி ஜப்பான் நாட்டுக்குச் சென்றார்.

அங்கு டோக்கியோ,  ஒசாகா ஆகிய ஜப்பானின் முக்கிய நகரங்களுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்நாட்டு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வெளிநாடு வாழ் தமிழர்கள் சங்கத்தின் சார்பில், ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்தபோது 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்க ரூ. 819 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர் முன்னிலையில் கையெழுத்தாகின. ரூ. 128 கோடி மதிப்பில் மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனமான ஓம்ரான், இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறையின் மூத்த அதிகாரிகள் உடன் சென்றனர். சிங்கப்பூரில்  போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்

மேலும், சிங்கப்பூரின் முன்னணி தொழல் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பயணத்தின்போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், சிப்காட், பேம்டிஎன் , டான்சிம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்துடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தன

இதற்குப் பிறகு ஜப்பானுக்குச் சென்ற முதல்வர், தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். வழக்கமாக, தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அரசுக் குழுக்கள் டோக்கியோ நகருக்கு மட்டுமே செல்லும் நிலையில், இந்த முறை முதலமைச்சர் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் ஒசாகா நகருக்கும் சென்றார்.

இது தவிர, 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதல்வர் கலந்துகொண்டார்.  இதற்கு முன்பாக 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஒரு வெளிநாட்டுப் பயணத்தை மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.

பொதுவாகவே, முதலமைச்சர்கள் இதுபோல தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போதும் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தும்போது முந்தைய பயணத்திலிருந்து மாநாட்டிலிருந்தும் எவ்வளவு முதலீடு பெறப்பட்டது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

தற்போதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி இதே கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தான் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட அமெரிக்க, துபாய் பயணங்களின் மூலம் சுமார் 8,800 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்ததாகவும் அதன் மூலம் 31 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு வெளிநாட்டு ஒப்பந்தமும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  சென்னை விமான நிலையத்திலிருந்து முதலமைச்சர் புறப்படுவதற்கு முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முந்தைய வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் இதுவரை வந்த முதலீடுகள் எவ்வளவு வந்திருக்கிறது எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், கடந்த பயணத்தன்போது ஆறு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன என்றும் ஷெராப் குழும நிறுவன முதலீடுகளை மேற்கொண்டிருப்பதாகவும் லூலூ குழுமம் கோயம்புத்தூரில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டதாகவும் சென்னையில் நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து பொருளாதார விமர்சகர்கள் கூறும்போது,  முதலீடுகளை ஈர்க்க இது போன்ற பயணங்கள் அவசியம்தான். “இது போன்ற பயணங்களை முறையாக மேற்கொண்டால் நிச்சயம் பயனளிக்கும். நாம் முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்வார்கள். நம்மால் என்னவெல்லாம் சலுகைகளை அளிக்க முடியும், அவர்களால் எப்போது முதலீடு செய்ய முடியும் என்பதெல்லாம் இதுபோன்ற பயணங்களில் தெளிவாகத் தெரியவரும். நேரில் பார்த்துப் பேசுவதால், சொன்னதைக் காப்பாற்றும் எண்ணம் வரும்.

அது தவிர, இது போலப் பயணங்களை மேற்கொள்வது, அதில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது குறித்த செய்திகள் வெளியானால், அது மேலும் பல நிறுவனங்களின் கவனத்தை ஈர்க்க உதவும். ஆனால், முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாம் கூடுதலாகச் சலுகைகளை அளிக்க வேண்டியதில்லை.

இந்தியா ஒரு மிகப் பெரிய சந்தை. எங்கே சந்தை இருக் கிறதோ, அங்கே முதலீடு வரும். ஆகவே, ஒவ்வொரு மாநிலமும் முதலீடுகளை ஈர்க்க போட்டிபோட்டுக்கொண்டு சலுகைகளைக் கொடுக்க வேண்டியதில்லை. இதனால், அரசுகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, எப்போதுமே ஓரளவுக்கு மேல் சலுகைகளை அரசுகள் வழங்கக்கூடாது

“ஒவ்வொரு அரசும் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்துகிறார்கள். பயணங்களை மேற்கொள்கிறார்கள். அதில் எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன என்பதைச் சொல்கிறார்கள்.

ஆனால், ஓராண்டு கழித்து அதில் உண்மையிலேயே எவ்வளவு முதலீடு, நிஜமாகியிருக்கிறது என்பதைச் சொல்ல வேண்டும். அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், அந்த விவரத்தைச் சொல்லத் தயங்கவேகூடாது.

ஏன் பிற முதலீடுகள் வரவில்லை என்பதையும் விளக்கலாம். இப்படியான வெளிப்படைத் தன்மை இருப்பது நன்மையே பயக்கும் என்றனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, 226 திட்டங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் 2,95,339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் வந்திருப்பதாகவும் 4,12,565 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு கூறுகிறது.

சமீபத்தில் மிட்சுபிஷி நிறுவனம் குளிர்சாதனப் பெட்டிகளைத் தயாரிக்கும் ஆலைக்கென 1891 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. நிஸலன் மற்றும் ரெனால்ட் நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள தங்கள் ஆலையை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

முதல்வரின் சிங்கப்பூர்,  ஜப்பான்  சுற்றுப்பயணத்தால் எத்தகைய பலன் கிடைக்கும் என்பதற்கான விடை  அடுத்த ஜனவரியில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்  தெரியும்.

இருப்பினும்,  ஆலைகள் தொடங்கப்பட்டு உற்பத்தி தொடங்கினால் மட்டும் தான் அந்த ஆலைகளால் தமிழகத்துக்கு எந்த அளவுக்கு பயன் கிடைத்திருக்கிறது என்பது தெரியவரும்.