குழந்தைகள் நலம் காக்கும் இதய சிகிச்சைகள்!

டாக்டர் வினோத் துரைசாமி, குழந்தைகள் இதய சிகிச்சை நிபுணர், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை

குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம் சார்ந்த பல்வேறு பாதிப்புகள் குறித்தும், அவற்றிற்கான சிகிச்சை வாய்ப்புகள் குறித்தும் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் குழந்தைகள் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் வினோத் துரைசாமி கூறியதாவது,

‘குழந்தைகளுக்கான இதய பாதிப்புகளைத் தீவிரமற்றது, தீவிரமானது என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தீவிரமற்ற பிரச்னைகளில் பல, நாளடைவில் தானாகவே சரியாகும். தீவிரமான பாதிப்புகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.

நூறில் ஒரு குழந்தைக்கு, பிறவியிலேயே ஒருவகை இதய பாதிப்புகள் (congenital heart disease) ஏற்படுகின்றன. இதயக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, இதயத்திலிருந்து இரத்தத்தைக் கொண்டு செல்லும் முதன்மையான இரத்தக்குழாய் குறுகி இருப்பது, இதயத்தில் ஏற்படும் ஓட்டை, இதய வால்வு சுருங்கியிருப்பது, இதயம் முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பது போன்ற பாதிப்புகள் இதற்கு காரணமாக இருக்கலாம். இவை தவிர, ஆக்சிஜன் குறைபாடு பாதிப்பான Cyanotic disease குழந்தைகளைப் பாதிக்கும் இதய நோய்களாகும். 25% congenital நோய்கள் தீவிர நோய் பாதிப்புகளாகவே ஏற்படும். அவற்றுக்கு உடனடி சிகிச்சை அவசியமாகும்.

இதய பாதிப்புகளை எவ்வாறு கண்டுபிடிப்பது?

குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சு விடுவதில் சிரமப்படுவர். இதனால் தொடர்ச்சியாக பால் குடிக்காமல் விட்டு விட்டு பால் குடிப்பார்கள். பால் குடிக்கவே சிரமப்படுவார்கள்.

இதயத்துடிப்பும் மூச்சு விடுவதும் தாறுமாறாக இருக்கும். குழந்தைகள் சோர்வாக காணப்படும், குழந்தையின் எடை அதிகரிக்காது, தொடர்ச்சியாக இருமல், சளி, நிமோனியா, காய்ச்சல் ஆகியவை ஏற்படும். தவிர, ஆக்சிஜன் குறைபாடு பிரச்னை காரணமாக நாக்கு மற்றும் விரல் நகங்கள் நீல நிறத்தில் மாறும்.

ஆக்சிஜன் குறைபாடு எவ்வாறு ஏற்படுகிறது?

இதயத்தின் வலது பகுதியில் அசுத்தமான இரத்தம் இருக்கும். அங்கிருந்து நுரையீரலுக்கு இரத்தம் சென்று சுத்திகரிக்கப்பட்டு, அதாவது ஆக்சிஜன் கலக்கப்பட்டு இதயத்தின் இடது பகுதிக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இரத்தம் செல்லும். இதில் பாதிப்புகள் ஏற்பட்டு சுத்தமான இரத்தமும் அசுத்தமான இரத்தமும் கலக்கும்போது Cyanosis இதய பாதிப்பு ஏற்படுகிறது. இதையே ஆக்சிஜன் குறைபாடு என்கிறோம்.

சாதாரணமாக உடலில் ஆக்சிஜன் அளவு 95 சதவிகிதத்திற்குமேல் இருக்க வேண்டும். 90 சதவிகிதத்திற்குக் கீழ் இருந்தால் அபாயகரமான நிலை. இந்த பாதிப்பு இருக்கும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் அளவு குறைந்து நாக்கு மற்றும் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

சிகிச்சை முறைகள் என்னென்ன?

குழந்தைகள் நல மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதித்துப் பார்த்து, இதய நோய் பாதிப்புகளைக் கண்டறிவர். பிறகு குழந்தைகள் இதய நல மருத்துவரிடம் சிகிச்சைக்காக அனுப்புவர். இங்கு அவர்களுக்கு மார்பு பகுதி எக்ஸ்ரே, இசிஜி ஆகியன முதற்கட்டமாக எடுக்கப்படும். பிறகு எக்கோகார்டியோகிராம் (echocardiogram) எனும் இதய பரிசோதனையின் மூலம் இதயத்தில் ஓட்டை அடைப்பு அல்லது Cyanosis நோய் பாதிப்புகள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்படும். பிறகு அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும்.

சிறிய அளவிலான இதய ஓட்டைகள் இருந்தால், அதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது. நாளடைவில் தானாகவே அந்த ஓட்டை மறைந்துவிடும். அதுவே இரத்தக் குழாய்களில் அடைப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

முன்பு ‘திறந்த இதய அறுவைசிகிச்சை’ செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது நவீன தொழில்நுட்ப உதவியோடு எளிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஞ்சியோகிராம் மூலம் தொடைப் பகுதியில் உள்ள இரத்த நாளங்களில் இருந்து இதயத்திற்கு நுண்குழாய்கள் அனுப்பப்பட்டு, இதயத்தில் உள்ள ஓட்டைகள் சரிசெய்யப்படுகின்றன. அடைப்புகள் இருந்தால் அவையும் அகற்றப்படுகின்றன.

இந்த அறுவை சிகிச்சையானது, சுமார் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். இந்த சிகிச்சை மேற்கொள்ளும் குழந்தைகள் அடுத்த நாளே வீடு திரும்பி, இயல்பு வாழ்க்கைக்கு உடனடியாகத் திரும்ப முடியும். தழும்புகளும் இருக்காது.

அறுவை சிகிச்சை முடிந்து ஒருசில வருடங்களுக்கு மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். தீவிர பாதிப்பிற்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள் தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனைகள் பெற வேண்டும்.

குழந்தைகள் இதய பாதிப்புகளுக்கான காரணங்கள் என்னென்ன?

குழந்தை கருவில் இருக்கும்போது முதல் இரண்டு மாதங்களில் குழந்தையின் இதயம் உருவாகும். அந்த சமயத்தில் தாய்க்கு அம்மை போன்ற நோய்த்தொற்று ஏற்பட்டு இருந்தாலும், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் இருந்தாலும், மருத்துவர்கள் பரிந்துரைக்காத மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் குழந்தைகளுக்கு இதய பாதிப்புகள் ஏற்படலாம். இவை தவிர மரபணு ரீதியாகவும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளைப் பெற்றோர் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். பிறக்கும்போதே இந்த அறிகுறிகள் தென்பட்டாலும், பிறந்த பின்பு இந்த அறிகுறிகள் தென்பட்டாலும், அவை தீவிரமான அல்லது தீவிரமற்ற இதய பாதிப்பாக இருக்கக் கூடும். எனவே அலட்சியம் செய்யாமல் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மரபணு ரீதியாக இந்த பாதிப்பு தொடர வாய்ப்பு இருப்பதால் பெற்றோர், அவர்களது குழந்தைகளை தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும்.

கருவுற்ற தாய்மார்கள் காய்ச்சல், சளி உட்பட எந்த நோய் பாதிப்புகள் வந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டுமே தவிர, தானாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. சர்க்கரை நோய் இருக்கும் கருவுற்ற தாய் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் Anomaly ஸ்கேன் பரிசோதனையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, 90% இதய பாதிப்புகள் கருவுற்ற ஐந்து மாதங்களிலேயே சரிசெய்யப்படும். மற்றொரு முக்கியமான விஷயம், மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தால் பெற்றோர் தாமதிக்கக் கூடாது. காரணம், மருத்துவர் பரிந்துரைக்கும்போது பாதிப்பை சரி செய்வது சாத்தியம். தாமதம் செய்வதால் சில வருடங்களுக்குப் பிறகு அதற்கான சாத்தியம் இல்லாமல் போகும். எனவே, குழந்தைகளுக்கு நல்ல வாழ்வைத் தர மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.