ஊட்டியில் ஒரு மாதமாக திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை.

ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையானது கடந்த ஒரு மாத காலமாக திறந்தே கிடக்கிறது. இதனால் அங்கு தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து தடுப்பு பலகை வைக்கப்பட்டது. ஆனால் தடுப்பு பலகைகள் வைத்தும் அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மற்றும் சைக்கிளில் வந்தவர் விபத்தில் சிக்கினர்.

அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பாதசாரிகள் கவனமாக செல்லவில்லை என்றால் பாதாள சாக்கடைக்குள் விழும் நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

தற்போது பள்ளிகள் திறக்க இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் அந்தப் பாதையை தான் பயன்படுத்துவார்கள் எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை மக்களின் நலன் கருதி உடனடியாக அதனை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.