கே.பி.ஆர். குழுமத்தின் சார்பில் பெண்களுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை அரசூர் கே.பி.ஆர். மில் குழுமத்தில் கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் முன்னெடுப்பில், கலைஞர்  செய்திகள் தொலைக்காட்சியுடன் இணைந்து ‘விடியல் – திரும்பும் திசையெல்லாம் கிழக்கு’ என்ற தலைப்பில் பெண்களுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை கே.பி.ஆர். குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமசாமி தலைமையேற்று நடத்தினார். சேலத்தை சேர்ந்த கண் மருத்துவர் இராம செல்வரங்கம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆனந்தி மற்றும் ஆதரவற்றோர் மகளிர் நல வாரிய உறுப்பினர் கல்யாணந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

கருத்தரங்கத்தின் தொடக்கவுரை மற்றும் நோக்கவுரையை தமிழ்நாடு அரசின் ஆசிரியர் மனசுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் வழங்கினார். அவர் பேசுகையில், தன்னிறைவடைந்த ஒரு மனிதர் தன்னால் இயலுமெனில், தன்னைச் சுற்றியிருக்கும் சமூகம் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்கின்ற ஒரு மனிதராக கே.பி ராமசாமி இருப்பதால்தான் வறுமையின் காரணமாக பஞ்சாலைப் பணிக்கு வந்தவர்களில் இருந்து இன்றைக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கி இருக்கின்றார் எனக் குறிப்பிட்டு பேசினார்.

கருத்தரங்கில் இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக்குழுவின் முன்னாள் ஆலோசகர் திருப்புகழ், முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்பொழுது, பெண்கள் முன்னேறினால்தான் இந்த நாடு முன்னேறும் என்பதை உணர்ந்த நிறுவனமாக இந்த கே.பி.ஆர். நிறுவனம் திகழ்கிறது. இதனைப் பாடமாக எடுத்துக்கொண்டு, ஓர் ஆய்வை மேற்கொண்டு ஒவ்வொரு நிறுவனங்களும் இல்லாதோருக்கு கல்வியைக் கொடுக்க முன்வர வேண்டும் எனப் பேசினார்.

பின்னர் நிகழ்வில் தலைமை உரையாற்றிய கே.பி.ஆர். குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமசாமி, இங்கு ஆண்டுக்கு 3 ஆயிரத்தி 500 பஞ்சாலை தொழிலாளிகள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதையும், உயர் கல்வி முடித்தவர்கள் வளாக நேர்காணலில் தேர்வாகி பல உயர் பதவிகளை பெற்றுள்ளதையும் கூறினார். தற்போது பஞ்சாலையில் வேலை செய்துக்கொண்டே படித்து சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது, என்கிறார்.

இந்நிகழ்வில் கே.பி.ஆர். மில் கல்வி நிறுவனத்தின் முதல்வர் சரவணபாண்டியன், கே.பி.ஆர். ஆலை வளாக துணைத் தலைவர் சோமசுந்தரம் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.