
கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் செயல்படும் பிரதமரின் ‘உன்னத் பாரத் அபியான்’ பிரிவின் சார்பாக கே.பி.ஆர். கல்லூரி தத்து எடுக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான காடுவெட்டிபாளையத்தில், ஸ்மார்ட் மழை அளவீட்டு கருவி பொருத்தப்பட்டது.
உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் நீர் மேலாண்மை கொள்கையின் கீழ் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் சிவில் கட்டுமானத் துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள இந்த புது வகை மழை அளவீட்டு கருவி மழை நேரங்களில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை, மழை அளவை அலைபேசி மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கே.பி.ஆர். கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், கருவியை வடிவமைத்த சிவில் கட்டுமானத் துறை பேராசிரியை மீனாட்சி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருவியின் மூலம் மழை அளவு கணக்கீடு, மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை ஆகியவை மேம்படும் என கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் அகிலா தெரிவித்தார். இந்தத் திட்டம் கல்லூரி முதல்வர் அகிலா வழி காட்டுதலில் நடைபெற்றது.